மயிலாடுதுறையில் கொடூரம்.. பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி!
Mayiladuthurai Male Child Died: மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய 1.5 வயது ஆண் குழந்தை ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், கோபாலசமுத்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அரசி. இவர்களுக்கு 2 மகள்களும், 1.5 வயதில் மகிழ்வேந்தன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. மகள்கள் இருவரும் தனியார் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களை தனியார் பள்ளி வேன் வீட்டுக்கே வந்து அழைத்து செல்வது வழக்கம் ஆகும். அதன்படி, சம்பவத்தன்று, தனது இரு மகள்களை பள்ளிக்கு அனுப்புவதற்காக வேனில் ஏற்றி விட சென்றார். அப்போது, தனது குழந்தை மகிழ்வேந்தனையும் தூக்கிக் கொண்டு சென்றார். இரு மகள்களையும் அரசி வேனில் ஏற்றி விட்ட போது, மகனை கீழே இறக்கி விட்டிருந்தார். அப்போது, வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்கினார். இதில், எதிர்பாராத விதமாக வாகனத்தின் பின் சக்கரத்தில் குழந்தை மகிழ்வேந்தன் சிக்கினார். வழி தாங்க முடியாமல் குழந்தை அலறியதை பார்த்த அரசி சத்தம் போட்டார். உடனே, வாகனத்தை அதன் ஓட்டுனர் நிறுத்தினார்.
வேன் பின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை
இதில், குழந்தை மகிழ்வேந்தன் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே திரண்டு வந்து வேனின் சக்கரத்தில் சிக்கிய குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியதுடன், முதலுதவி அளித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: சிறுவயது மகனுக்கு மது ஊற்றி கொடுத்த தந்தை… வீடியோ வைரலானதால் கம்பி எண்ணிய தகப்பன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!




தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை உயிரிழப்பு
அங்கிருந்து, அந்த குழந்தையை மயிலாடுதுறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு, குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து, குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோபாலசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கோபாலசமுத்திரம் போலீசார் விசாரணை
மேலும், இந்த விபத்து தொடர்பாக கோபாலசமுத்திரம் காவல் நிலையத்தில் பாலாஜி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனியார் பள்ளி வாகனத்தில் ஓட்டுநரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்து சம்பவம் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி 1.5 வயது குழந்தை உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சிவகங்கையில் பரபரப்பு.. காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ. மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி அதிரடி கைது!