சிவகங்கையில் பரபரப்பு.. காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ. மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி அதிரடி கைது!
DMK Functionary Arrested: சிவகங்கை மாவட்டத்தில் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி அமைப்பாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கல்லல் பகுதி விருச்சுழி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் கடத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் சப் இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் பணியில் இருந்தார். அப்போது, மது போதையில் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த கல்லல் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரான அடைக்கலராஜ் ( 32 வயது) உதவி ஆய்வாளர் துரைசிங்கத்திடம் ஆபாசமாக திட்டியதுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தொடர்ந்து இந்த பகுதியில் நான் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் எந்த அதிகாரியும் கேள்வி கேட்டது கிடையாது என்று கூறிய போதே, உதவி ஆய்வாளர் துறை சிங்கத்தின் கையை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
திமுக நிர்வாகி அதிரடி கைது
இதில், உதவி ஆய்வாளர் துரைசிங்கத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் துரைசிங்கம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்த வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு எஸ். பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கல்லல் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அடைக்கலராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் போலீசார் அடைத்தனர்.
மேலும் படிக்க: 3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!




விஏஓ அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை
கல்லல் பகுதியில் விசாலங்கோட்டை சாத்தம்பட்டி பகுதியில் உள்ள ஆற்றில் மர்ம நபர்கள் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று மணல் அள்ளப்படுவதாக சன்னவண்ணம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர், இது தொடர்பாக கல்லல் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தான் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
மணல் கடத்தல் வண்டிகள் பறிமுதல்
அப்போது மணல் கடத்திக் கொண்டு சென்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், ஏற்பட்ட ஆத்திரத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவத்தால் கைதாகி உள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சிறுவயது மகனுக்கு மது ஊற்றி கொடுத்த தந்தை… வீடியோ வைரலானதால் கம்பி எண்ணிய தகப்பன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!