தமிழகத்தில் அதிரடி.. மாநகராட்சி-நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் வேட்டை!
Anti Corruption Police Raid: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என சுமார் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். அந்த வகையில், அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சுமார் 40 மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 3- ஆம் தேதி) திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை திருநெல்வேலி திருவண்ணாமலை, சேலம், தூத்துக்குடி ஈரோடு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகங்கள்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சோதனை
இதே போல, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே உள்ள தாடிக்கொம்பு ஊராட்சி அலுவலகம், திருவாரூர், அரியலூர், திருச்செங்கோடு, திருத்தணி, தென்காசி, மதுரை மாவட்டம், திருமங்கலம், நீலகிரி மாவட்டம், குன்னூர், தர்மபுரி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நகராட்சி அலுவலகங்கள் என சுமார் 40 அரசு அலுவலகங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது.
மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடி? -கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தகவல்




அரசு அலுவலகங்களில் அதிரடியாக நுழைந்த போலீசார்
ஒவ்வொரு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் திடீரென அலுவலகங்களுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, அலுவலகத்தில் உள்ளே இருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு அலுவலகங்களின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை மூடி சோதனைகளை தொடங்கினர்.
அரசு ஊழியர்களின் செல்போன்கள் பறிமுதல்
அப்போது, மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும், கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பாக அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கணக்கில் வராத பணம்- ஆவணங்கள் பறிமுதல்?
இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், சோதனையின் முடிவில் எவ்வளவு பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஓ- சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை
ஏற்கனவே, தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில், பல்வேறு அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க: மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.. எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்..