தடுப்புக்கட்டையில் மோதிய கார்.. விழுப்புரம் அருகே நிகழ்ந்த கோர விபத்து.. சென்னையை சேர்ந்த இருவர் மரணம்!
Villupuram Car Accident Two Women Died: விழுப்புரம் மாவட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாவட்டம், மயிலாப்பூர் பகுதியில் உள்ள லலிதா நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் ( 63 வயது). இவரது மனைவி விசாலாட்சி ( 59 வயது), விஸ்வநாதன் தாய் லட்சுமி ( 91 வயது). இவர்களது உறவினர் பத்மநாபன் என்பவரின் மனைவி நாகலட்சுமி ( 59 வயது). ஆகியோர் ஒரே காரில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை விஸ்வநாதன் ஓட்டினார். இந்த காரானது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மேலேக்கொந்தை கூட்டுச் சாலை அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனர் விஸ்வநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
விபத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணி
இதனால், காரில் பயணித்த விஸ்வநாதன், விசாலாட்சி, லட்சுமி, நாகலட்சுமி ஆகியோர் பலத்த ரத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். தொடர்ந்து, அவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: கரூர் சம்பவம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு!!




இரு பெண்கள் உயிரிழப்பு- இருவருக்கு தீவிர சிகிச்சை
ஆனால், செல்லும் வழியிலேயே விசாலாட்சி மற்றும் லட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து, விஸ்வநாதன் மற்றும் நாகலட்சுமி ஆகியோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த விசாலாட்சி மற்றும் லட்சுமி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை
இதைத் தொடர்ந்து, விஸ்வநாதன் குடும்பத்தினர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது. உடனே, பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான காரை போலீசார் மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடி? -கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தகவல்