முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு.. திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது.. உச்சக்கட்ட பரபரப்பு!!
நீதிமன்ற உத்தரவு வெளிவந்த சமயத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறவிருந்த ஒரு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த ஆத்தூர் காவல்துறையினர் அவரைச் சூழ்ந்து கொண்டு கைது செய்வதாக அறிவித்தனர்.
தூத்துக்குடி, ஜூலை 03: தமிழக முதல்வர் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியான சில நிமிடங்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சாலைகளை மறித்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
இதையும் படிக்க : “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!
வழக்கின் பின்னணி:
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் திமுக சார்பில் ‘கலைஞரின் பொதுக்கூட்ட விழா’ நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய் குறித்தும், அவரை மற்றொரு நடிகையுடன் ஒப்பிட்டும் அவதூறான கருத்துக்களைப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், முதல்வர் குறித்து அவதூறு பரப்பியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஆத்தூர் காவல்துறையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி:
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, இரண்டு நாட்களுக்கு முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். ஒரு பொதுவெளியில் எப்படிப் பேச வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டி, அவரது முன்ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கைது:
நீதிமன்ற உத்தரவு வெளிவந்த சமயத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறவிருந்த ஒரு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த ஆத்தூர் காவல்துறையினர் அவரைச் சூழ்ந்து கொண்டு கைது செய்வதாக அறிவித்தனர். கைது செய்யப்பட்ட போது, அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த வாகனத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருவதாகக் கூறினார். ஆனால், காவல்துறையினர் அதற்கு உடன்படாமல், அவரைத் தங்களது போலீஸ் வாகனத்திலேயே பலவந்தமாக ஏற்றி அழைத்துச் சென்றனர்.
திமுகவினர் மறியல்:
அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல்துறை வாகனத்தை முன்னோக்கிச் செல்ல விடாமல் மறித்து முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. எனினும், காவல்துறையினர் மறியலை மீறி அவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்க: “யாரும் செய்யலனா நாங்க செய்வோம்!”.. மதுரையில் திடீரென களம் இறங்கிய பொறுப்பு ஆளுநர்.. நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!
தமிழக அரசியலில் முக்கியத்துவம்:
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய மற்றும் முதல் கைது நடவடிக்கை இதுவாகும். திமுகவின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.