பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேக செயலி.. தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. சிறப்பம்சங்கள் என்ன?
பெரம்பூர் தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகளை உடனுக்குடன் அறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள், குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், மின்சாரம், தெருவிளக்கு, துப்புரவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை நேரடியாக பதிவு செய்யலாம்.
ஜூலை 3, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் சொந்த சட்டமன்றத் தொகுதியான பெரம்பூர் தொகுதிக்காக பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலி மூலம், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக பதிவு செய்யலாம் என்றும், அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றார்.
சொந்த தொகுதி மக்களுக்காக மொபைல் செயலி:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு தொகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதால், விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு நேரில் செல்லவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடுமையான நிர்வாகப் பணிகள் மற்றும் அரசு அலுவல் நெருக்கடி காரணமாக தொகுதிக்குச் செல்லும் பயணம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அமோனியா வாயு அகற்றும் பணி.. தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு.. பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் ?
இருப்பினும், பெரம்பூர் தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகளை உடனுக்குடன் அறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் பொதுமக்கள், குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், மின்சாரம், தெருவிளக்கு, துப்புரவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை நேரடியாக பதிவு செய்யலாம். இந்த செயலி, முதலமைச்சரின் தனிப்பிரிவுடன் நேரடியாக இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
3 நாட்களுக்குள் நடவடிக்கை:
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை தொடங்க வேண்டும் என்றும், குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் துப்புரவு போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு அதிகபட்சம் 10 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராகாத எ.வ.வேலு.. காரணம் என்ன?
அடுத்த வாரம் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்:
இதனிடையே, பெரம்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக வந்து தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை அளிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரத்யேக மொபைல் செயலி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அடுத்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு, பெரம்பூர் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.