மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.. எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்..
தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும், கழகத்திற்காக முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் பணியாற்றினேன். ஆனால், மரணத்தைவிட கொடியது புறக்கணிப்புதான் என்பதை நான் உணர்ந்தேன். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து அதிமுக சமரசப் போக்குக்கு மாறியதால், தனது அரசியல் அடையாளத்தை இழந்துவிட்டது என வைகை செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 3, 2026: அதிமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவைப் பொறுத்தவரை, கடந்த சில வாரங்களாகவே பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த பலரும் தொடர்ந்து கட்சியை விட்டு விலகி வருகின்றனர்.
தற்போது வரை ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும், நேற்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 15 ஆயிரம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்:
இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான வைகை செல்வனும், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: “ஒரு தலைவர், தானே அழிந்தாலும் தனது கொள்கைகளும் இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார். ஆனால், இயக்கமும் கழகத் தொண்டர்களும் அழிந்தாலும், தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் நல்ல தலைவராக இருக்க முடியாது.
மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு:
“தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும், கழகத்திற்காக முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் பணியாற்றினேன். ஆனால், மரணத்தைவிட கொடியது புறக்கணிப்புதான் என்பதை நான் உணர்ந்தேன். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து அதிமுக சமரசப் போக்குக்கு மாறியதால், தனது அரசியல் அடையாளத்தை இழந்துவிட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்ததால், வெற்றிப் பாதையிலிருந்து அதிமுக விலகிச் சென்றுவிட்டது.
மேலும் படிக்க: தலைமையின் தவறான முடிவால் தள்ளாடும் அதிமுக.. தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள் பேச்சு!
மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது:
‘மதியாதார் பின் சென்று உயிர்வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாமல் கெட்டான் எனப்படுதல் நன்று’ என்ற வள்ளுவப் பேரரசின் வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிகிறேன்.
மாணவப் பருவம் தொட்டு ரத்தமும் சதையுமாக இருந்த இந்த இயக்கத்தோடு பணியாற்றிய நான், தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கும்போது ஏற்படும் மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
நேரம் வரும்போது இதுகுறித்து மேலும் பேசுவேன். புதிய இடத்தில் நடுவதற்காக புடுங்கிச் செல்லப்படும் செடியில் ஒட்டியிருக்கும் பழைய மண்ணைப் போல, இந்த இயக்கத்திற்காக நான் ஆற்றிய பணிகளின் நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். வைகை செல்வனின் இந்த அறிவிப்பு, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.