லஞ்ச ஓழிப்பு போலீஸ் விசாரணை.. சிங்கப்பூர் தப்பி சென்றாரா எ.வ.வேலு? வழக்கறிஞர் அளித்த விளக்கம்!
EV Velu Highway Department Corruption Case : நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை காவல் நிலையத்தில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு சிங்கப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு நெடுஞ்சாலை துறையில் பணிகளையும் மேற்கொண்டதில் முறைகேடு செய்திருப்பதாகவும், சில இடங்களில் சாலைகள் அமைக்காமலேயே சாலைகள் அமைத்ததாக கூறி மோசடி செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 3- ஆம் தேதி) லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் எ.வ. வேலு ஆஜராக கோரி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராக வில்லை. ஆனால், அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை
அதில், முன்னாள் அமைச்சர் எ. வ. வேலுவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சிகிச்சை முடிந்த பின்னர் தமிழகம் வரும் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு லஞ்ச ஒழிப்பு போலீஸ் காரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: கரூர் சம்பவம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு!!




நெடுஞ்சாலை பணிகளில் ரூ.3.23 கோடி ஊழல்
கடந்த 2022- ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலை உள்கட்டமைப்பு மற்றும் சாலை விரிவாக்க மேம்பாட்டு பணிகளில் முறைகேடு நிகழ்ந்ததாகவும், குறிப்பாக ஒப்பந்ததாரர்கள் சிலருக்கு முடிக்கப்படாத பணிகள், பல்வேறு இடங்களில் அமைக்கப்படாத சாலை பணிகள் ஆகியவற்றுக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் உதவியோடு பல கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் என்ற சமூக நல அமைப்பு சென்னையில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்திருந்தது. இதில். சுமார் ரூ.3.23 கோடி விதிமுறைகள் நிகழ்ந்துள்ளதாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் தப்பி சென்றாரா எ.வ. வேலு
இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எ.வ. வேலு வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில், கணினி உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் எ.வ. வேலு சிங்கப்பூர் தப்பி சென்றாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.. எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்..