AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்.. தவெகவில் இணையக்கோரி அழுத்தம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

Anitha Radhakrishnan Arrest: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம் செய்வதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தில் சேர கோரி நெருக்கடி அளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி அளித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்.. தவெகவில் இணையக்கோரி அழுத்தம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!
அனிதா ராதாகிருஷ்ணன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 03 Jul 2026 18:50 PM IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை இன்று காலை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து, எஸ். பி. அலுவலகத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அவரை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடல் நல குறைவு உள்ளிட்டவற்றை காரணமாக குறிப்பிட்டு அவருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்

அதன்படி, அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தன்னை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம் செய்கின்றனர். தமிழக வெற்றி கழகத்தில் சேர கோரி அந்த கட்சியின் தலைமையில் இருந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணிப்பேன். தளபதி மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன். பொய் வழக்குகள் போட்டு என்னை யாரும் தடுக்க முடியாது.

மேலும் படிக்க: தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

விஜய்யை மட்டுமின்றி யாரையும் எதிர்கொள்வோம்

முதல்வர் விஜய் மட்டுமல்ல யாரையும், நாங்கள் எதிர்கொள்வோம். நான் தவறு செய்யாதவன், எதையும் துணிவோடு எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய முதல்வர் விஜய் அவதூராக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால், தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட அனிதா

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, திருச்செந்தூர் தொகுதியில் மேம்பாட்டு பணிகளை தொகுதியின் எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்து எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, எஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பதற்காக அவரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனயைில் அனுமதி – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Follow Us