தமிழகத்தில் அனைத்து ஹோட்டல்களிலும் 3 மாதங்களுக்கு தீவிர ஆய்வு – வெளியான அதிரடி உத்தரவு
Food Safety Inspections : தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் செப்டம்பர் 1, 2026 இன்று முதல் நவம்பர் 30, 2026 வரை 3 மாதங்களுக்கு சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல்கள் மட்டுமின்றி கேண்டீன்கள் போன்றவற்றிலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
சென்னை, செப்டம்பர் 1 : தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து உணவு விற்பனை மற்றும் உணவு சேவை நிறுவனங்களிலும் செப்டம்பர் 1, 2026 இன்று முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சிறப்பு ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.ஹோட்டல்களின் சமையலறைகளின் சுகாதாரம், உணவுப் பொருட்கள் சேமிக்கப்படும் இடங்களின் தரம், உணவு கையாளுபவர்களின் தனிப்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஆய்வின்போது தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளன.
3 மாதங்களுக்கு சிறப்பு ஆய்வு
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம், 2006ன் விதிகளின்படி, செப்டம்பர் 1, 2026 இன்று முதல் நவம்பர் 30, 2026 வரை 3 மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வுகள் உணவகங்களில் மட்டுமின்றி, பல்வேறு வகையான உணவு விற்பனை மற்றும் உணவு சேவை நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதையும் படிக்க : மூதாட்டியின் வீட்டுக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட் – கூலிங் கிளாஸ் அணிவித்து மகிழ்ச்சி




குறிப்பாக, ஹோட்டல்கள், கேன்டீன்கள், கேட்டரிங் நிறுவனங்கள், சாலையோர ஹோட்டல்கள், சிறிய அளவிலான உணவகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் தங்களது சமையலறை மற்றும் உணவு சேமிப்பு பகுதிகளில் சுய தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ள பட்டியலின் படி அனைத்து வகையான உணவு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட உள்ளது. அந்தப் பட்டியலின் அடிப்படையில் உணவு வணிகர்கள் தங்களது நிறுவனங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை முன்கூட்டியே சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?
மேலும், இதற்கான அறிக்கையை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வுக்கு வரும்போது தயாராக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு சேவை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது, அந்த நிறுவனம் உணவு தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை பெறப்பட்டுள்ளதா என சரிபார்க்கப்படும். இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹோட்டல்களில் சமையலறைகளில் உணவு தயாரிக்கப்படும் விதம், பயன்படுத்தப்படும் இடங்களின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட உள்ளன. குறிப்பாக, உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைத்திருப்பது தொடர்பான விதிமீறல்களுக்கு அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.