சேலத்தில் உறைய வைக்கும் கொடூரம்.. பெண்ணை வெட்டிக் கொன்று உடல் பாகங்களை மூட்டையாகக் கட்டி வீச்சு!!
Woman Body Parts Found in Water Tank: சேலம் அரிசிபாளையத்தில் துர்நாற்றம் வீசிய வீட்டின் மேல்நிலைத் தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்த உரிமையாளருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண் ஒருவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, தலை, உடம்பு, கை மற்றும் கால்களைத் தனித்தனியாகப் பிரித்து இரண்டு மூட்டைகளாகக் கட்டித் தண்ணீர் தொட்டிக்குள் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், ஆகஸ்ட் 31: சேலம் மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதியில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை உறைையவைத்துள்ளது. மனிதநேயமற்ற முறையில் பெண் ஒருவரைக் கொடூரமாகப் படுகொலை செய்து, அவரது உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி மூட்டைகளில் கட்டித் தண்ணீர் தொட்டிக்குள் வீசிச் சென்ற கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டின் குழாயில் வந்த தண்ணீரில் வீசிய சகிக்க முடியாத துர்நாற்றமே இந்த விபரீதக் குற்றத்தைக் காவல்துறையினருக்குக் காட்டிக் கொடுத்துள்ளது.
குழாயில் வீசிய துர்நாற்றம் வெளிவந்த கொடூரம்:
சேலம் மாநகர் அரிசிபாளையம், குணபால ராமசாமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் குழாயைத் திறந்தபோது, அதில் வந்த தண்ணீர் கடும் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் மேல் தளத்தில் உள்ள மேல்நிலைத் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்யச் சென்றுள்ளார். அங்குச் சென்று பார்த்தபோது தொட்டியிலிருந்து வீசிய துர்நாற்றம் மேலும் அதிகமாகவே, தொட்டியின் மூடியைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அதற்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு பெரிய மூட்டைகள் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
