உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை வழங்க உள்ளது. ஆனால், இந்தத் தொகை ஒரே தவணையாக பெற்றோரின் வங்கிக் கணக்கில் வழங்கப்படாது. குழந்தை பிறந்தது முதல் 17 வயது வரை பல்வேறு திட்டங்களின் மூலம் இந்த நிதியுதவி வழங்கப்படும். சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ள புதிய SG Child Support Package திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகன் குழந்தைக்கும் அதிகபட்சமாக 70 ஆயிரம் சிங்கப்பூர் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம் வரை அரசின் நேரடி நிதியுதவி கிடைக்கும். இதில் முதற்கட்டமாக, குழந்தை பிறந்தவுடன் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும். இந்தத் தொகை குழந்தையின் முதல் 12 மாதங்களில் இரண்டு தவணைகளாக வழங்கப்படும். அதன்பிறகு, குழந்தைக்கு ஒரு வயது முதல் 16 வயது வரை, ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும். இதன் மூலம் 16 ஆண்டுகளில் மட்டும் 32 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் கிடைக்கும். மேலும், குழந்தையின் கணக்கில் 5 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும்.