கிணறு எங்களுக்கு தான் சொந்தம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. கிராம மக்கள் சரமாரி புகார்!
Minister Jagadeeswari : தூத்துக்குடி மாவட்டத்தில் 60 ஆண்டு காலமாக பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த கிணற்றை சொந்தம் கொண்டாடுவதாகவும், அந்த கிணற்றில் குடிநீர் எடுக்கக்கூடாது என்று கூறுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது கிராம மக்கள் புகார் அளித்து உள்ளனர் .
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனைவிளை கிராமத்தில் பழமை வாய்ந்த ஊர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறானது சுமார் 60 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிணற்றை தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த கிணற்றின் நிலத்தடி நீர் ஆதாரத்தை தான் அந்தப் பகுதி மக்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு சொந்தமான அந்த பழமையான கிணற்றை தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய பிரமுகரும், ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கேட்டனர்.
கிணறு எங்களுக்கு சொந்தமானது
அப்போது, இந்த கிணற்றை கிராம மக்கள் பயன்படுத்துவதற்காக எங்கள் முன்னோர்கள் எந்த ஒரு பத்திரமும் எழுதி தரவில்லை. இது எங்களுக்கு சொந்தமானது என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மட்டும் இன்றி இனிமேல் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் யாரும் இந்த கிணற்றை உபயோகப்படுத்தக் கூடாது எனவும், இந்த கிணற்றின் அருகே யாரும் வரக்கூடாது, குடிநீர் எடுக்கக் கூடாது என்று தெரிவித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பதைபதைக்கும் விபத்து.. மதுரை அருகே ஜேசிபி மீது கார் மோதி கோர விபத்து.. ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!




அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது தொடர் புகார்கள்
ஏற்கனவே, அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகள் வைக்கப்பட்டிருந்த கட்ட அவுட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பெரிதாகவும், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் சிறியதாகவும் பேனரின் கீழ் பகுதியில் பெயர் அச்சிடப்பட்டிருந்ததாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் விழா மேடையிலேயே கடிந்து கொண்டார்.
தவெக நிர்வாகியை அமைச்சர் மிரட்டிய ஆடியோ
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. இதே போல, தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவரை காவல் நிலையத்தில் புகார் அளித்து ஜட்டியோடு நிற்க வைத்து அடிக்க வைத்து விடுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இவ்வாறாக அவர் மீது பல்வேறு மறைமுக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. நிரந்தர சார்பதிவாளர்- உதவி அலுவலர் சஸ்பெண்ட்!