பழனி நில முறைகேடு வழக்கு.. நிரந்தர சார்பதிவாளர்- உதவி அலுவலர் சஸ்பெண்ட்!
Palani Sub Registrar Suspended: பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் நில முறைகேடு வழக்கில் நிரந்தர சார் பதிவாளர் மற்றும் உதவி அலுவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, மற்றொரு சார் பதிவாளர், மாவட்ட பதிவாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பதிவு செய்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஏற்கனவே சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பழனி நிரந்தர சார்பதிவாளரான பாலசந்தர் மற்றும் உதவி அலுவலர் சிவசங்கரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூரில் பணிபுரிந்து வந்த பாலசந்தர் கடந்த ஜூன் முதல் வாரத்தில் பழனிக்கு பணியிட மாற்றம் ஆகி வந்துள்ளார். அவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய முடியாது என நிறுத்தி வைத்திருந்த ஆவணங்களை சரி பார்க்காமல் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்துள்ளார். பின்னர், விடுப்பு முடிவடைந்து மீண்டும் பணிக்கு வந்த பாலசந்தர் இந்த முறைகேடு பத்திரப்பதிவை கண்காணிக்காமல் விட்டதாக தெரிகிறது.
இருவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை
இதன் காரணமாகவும், இந்த புகாரில் தகவல்களை மறைத்ததாகவும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோவில் நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அந்த நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஏற்கனவே சஸ்பெண்டான சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த ஜூலை 27- ஆம் தேதி முதல் ஆஜராகி வருகிறார். அவரிடம் சிபிசிஐடி எஸ் பி சஜிதா, டிஎஸ்பி அஜய் தங்கம் ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: தமிழக மின்சார வாரியத்தில் வரலாற்று சாதனை.. ஒரே நேரத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு.. முதல்வர் விஜய் அதிரடி!!
சார் பதிவாளர் பதிவு செய்த ஆவணங்கள் சேகரிக்கும் பணி
இது மட்டுமின்றி, இவர் பணிபுரிந்த பழனி, கொடைக்கானல், வடமதுரை, தேனி, ஒட்டன்சத்திரம் ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக பத்திரப்பதிவு ஏதும் நடைபெற்றதா என்பது தொடர்பாக 3 பேர் தலைமையிலான தணிக்கை குழு ஆய்வு செய்து வருகிறது. மேற்கண்ட அலுவலகங்களில் ஏதேனும் மோசடி நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆவணங்களை சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
20 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார்
இவர் மீது ஏற்கனவே, தேனி மாவட்டம், பெரியகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த போது நிலத்தை ஆழ்மாறட்டும் செய்து பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுக MLA மார்க்கண்டேயனுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்.. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க விலக்கு!!