கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள பள்ளி மாணவர்களின் பேருந்தில் தீ விபத்து – பரபரப்பு தகவல்
Kodaikanal School Bus Fire : தொடர் விடுமுறை காரணமாக கேரள பள்ளியை மாணவ மற்றும் மாணவியர் 50க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே பேருந்து சென்றபோது திடீரென பேருந்தின் டயர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தேனி, நவம்பர் 8 : கேரளத்தில் (Keralam) இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பள்ளி மாணவர்களின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள பள்ளி மாணவர்களின் பேருந்தில் தீ விபத்து
தொடர் விடுமுறை காரணமாக கேரள மாநிலம் பாலக்காட்டில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவ மற்றும் மாணவியர் 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு நவம்பர் 7, 2026 அன்று சுற்றுலா வந்துள்ளனர். இந்த நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை பார்வையிட்ட மாணவர்கள் அங்கிருந்து கேரள மாநிலம் மூணாறு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க : திருத்தணி முருகன் கோயிலில் தரிசன கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு!




இந்த நிலையில் நவம்பர் 8, 2026 இன்று கொடைக்கானலில் இருந்து மூணாறு நோக்கி மாணவர்கள் பயணித்த பேருந்து சென்று கொண்டிருந்தது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே பேருந்து சென்றபோது திடீரென பேருந்தின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. பேருந்தில் இருந்து புகை வரவே பயத்தில் பள்ளி மாணவர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மாணவர்களை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டுள்ளார்.
இதனையடுத்து சில மணி நேரங்களிலையே பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டுள்ளனர். தீ வேகமாக பரவத் தொடங்க உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெரியகுளம் மற்றும் வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்துக்குகு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை முழுவதும் அணைத்தனர்.
ஆனால் அதற்குள் பேருந்தின் பெரும்பாலான பகுதி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இதில் பேருந்தில் இருந்த மாணவர்களின் உடமைகளும் தீயில் கருகி அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. ஓட்டுநர் சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால், மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!
இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலில் பேருந்தின் டயர் வெடித்ததில் சிராய்வு ஏற்பட்டு பேருந்தின் குளிர்சாதன சிலிண்டர் மூலமாக தீ பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாற்று பேருந்து மூலம் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனப் போக்குவரத்து தடைபட்டது.