பெரியார் அறிவுலக போலி நூல்கள் சர்ச்சை – பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்
Periyar Arivulagam Fake Books Controversy : கோவை பெரியார் அறிவுலக விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொது நூலகத்துறை இயக்குநரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக பொது நூலகத்துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 8 : கோவையில் முதல்வர் விஜய்யால் (CM Vijay) சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்குவது தொடர்பாக முறைக்கேடு நடைபெற்றதாகவும், அகல்விளக்கு பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். போலியான புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என அவர் தெரிவித்தது தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்
கோவை பெரியார் அறிவுலகம் கடந்த திமுக ஆட்சியிக் கட்டப்பட்டாலும், தவெக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலி நூல்கள் குற்றச்சாட்டில் திமுக மற்றும் தவெகவினர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார். மேலும் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டதில் முறைக்கேடு நடைபெற்றிருக்கிறதா என ஆய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவை பெரியார் அறிவுலகத்தில் இருந்து போலியான நூல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொது நூலகத்துறை இயக்குநரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக உள்ள ஜெயந்தி ஐ.ஏ.எஸ். பொது நூலகத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் ஜெயந்தி ஐ.ஏ.எஸ். கூடுதல் பொறுப்பு வகித்து வந்த பொது நூலகத்துறை இயக்குநர் பதவி திரும்பப் பெறப்பட்டது. பொது நூலகத்துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.




அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
இதற்கிடையில் பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊழல் தடுப்பு சட்டத்தை பொறுத்தவரை, அலட்சியத்தையும் கருத்தில் கொள்வார்கள். அரசியல்வாதிகளாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், அதனால்தான் வெறும் துறை சார்ந்த நடவடிக்கையோடு நிறுத்திக்கொள்ளாமல், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நாங்களே நேரடியாகச் சென்று புகார் அளித்துள்ளோம். இதன் மூலம் எந்த அதிகாரியும் தப்பிக்க முடியாது. எந்த அரசியல்வாதியும் தப்பிக்க முடியாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட கொள்முதல் ஆணையை எப்படி மாற்ற முடியும்? பணி நியமன ஆணையை எப்படி மாற்ற முடியும்? என கேள்வி எழுப்பினார்.