நெல்லூர் அருகே கரை ஒதுங்கிய மேலும் 2 மீனவர்களின் உடல்கள் – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
Kasimedu Fishermen Bodies Recovered : முரசு புயலின்போது படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய 9 மீனவர்களில் மேலும் 2 பேரின் உடல்கள் நெல்லூர் அருகே கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரது உடல்களும் சென்னைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, நவம்பர் 8 : முரசு புயலின்போது (Cyclone Murasu) படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய 9 மீனவர்களில் மேலும் 2 பேரின் உடல்கள் நெல்லூர் அருகே கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், படகில் ஏற்பட்ட பழுதால் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். 7 மீனவர்களின் உடல்கள் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில் ராஜேஷ், நாராயணன் ஆகியோரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லூர் அருகே கரை ஒதுங்கிய மேலும் 2 மீனவர்களின் உடல்கள்
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் கடந்த அக்டோபர் 29, 2026 அன்று, விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென புயல் ஏற்பட பாதுகாப்பு காரணங்களுக்காக ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் படகை நிறுத்தியுள்ளனர். புயல் கரையைக் கடந்த பிறகு மீன்பிடிக்க சென்ற நிலையில் நடுக்கடலில் விசைப்படகின் என்ஜின் பழுதடைந்தததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த, நவம்பர் 3, 2026 அன்று அதிகாலை 3.30 மணியளவில் வயர்லெஸ் கருவி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள பள்ளி மாணவர்களின் பேருந்தில் தீ விபத்து – பரபரப்பு தகவல்




அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, மீனவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் தான் ஆந்திர மாநிலம் கோத்தப்பட்டினம்மற்றும் பள்ளிபாலம் கடற்கரைப் பகுதிகளில் 7 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள 2 பேர் இதுவரை கிடைக்காத நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்றதாலேயே இந்த சம்பவத்துக்கு காரணம் என கடலோர காவல் படை தெரிவித்திருக்கிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.புயல் காலங்களில் நடைமுறையில் உள்ள வானிலை எச்சரிக்கைகளைப் புறக்கணித்துக் கடலுக்குச் செல்வதால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்துகளை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இதனையடுத்து எதிர்காலத்தில் மீனவர்கள மாநில அரசு மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை வெளியிடும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் கடலில் மிக மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் நிலவியுள்ளன. புயலின் மையப்பகுதி கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாகக் குறைந்திருக்கக்கூடும். இதனைப் புயல் முழுமையாகக் கடந்துவிட்டதாக மீனவர்கள் தவறாகக் கருதியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால், புயலின் பின்பகுதி அப்போது கடக்க வேண்டியிருந்தது.
இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தீபாவளி மறுநாளும் கனமழை எச்சரிக்கை – இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
இந்த நிலையில் மேலும் 2 பேரின் உடல்கள் நெல்லூர் அருகே கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த 2 பேரின் உடல் ராஜேஷ், நாராயணன் ஆகியோரின் உடல்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரது உடல்களும் சென்னைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் சென்னை மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.