இணையத்தில் 200க்கும் மேற்பட்ட ஆபாச பதிவுகளை நீக்கிய தமிழக இளைஞர் – அசாம் காவல்துறை பாராட்டு
மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரகதீஷிடம் அசாம் மாநிலத்தில் இணையதளங்களில் பரவி வரும் பெண்களுக்கு எதிரான புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க அம்மாநில காவல்துறை உதவி கோரியது. இதனையடுத்து பிரகதீஷ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை நீக்கியுள்ளனர்.
திருவாரூர், ஆகஸ்ட் 11 : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரகதீஷ், ஷெட்பீக் என்ற பெயரில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் சைபர் கிரைம் கிரைசஸ் ரெஸ்பான்ஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஒரு அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் இணையதளங்களில் பரவும் பெண்கள் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் படங்கள், அவதூறு கருத்துகள் போன்ற குற்றங்களை கண்டறிந்து நீக்கி வருகிறார்.
இணையத்தில் 200க்கும் மேற்பட்ட ஆபாச பதிவுகளை நீக்கிய தமிழக இளைஞர்
இந்த நிலையில் பிரகதீஷிடம் அசாம் மாநிலத்தில் இணையதளங்களில் பரவி வரும் பெண்களுக்கு எதிரான புகைப்படங்கள், வீடியோக்களை நீக்க அம்மாநில காவல்துறை உதவி கோரியது. இதனையடுத்து பிரகதீஷ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து 200க்கும் மேற்பட்ட கண்டென்ட்களை நீக்கியுள்ளனர். இதனையடுத்து பிரகதீஷ் மற்றும் அவரது குழுவினரை அம்மாநில சைபர் கிரைம் காவல்துறை அதிகாரி எஸ்பிசி.ஆர்.சிங் பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையும் படிக்க : லஞ்ச புகாரில் கட்சியிலிருந்து நீக்கம்.. செங்கல்பட்டில் கணவரின் பதவி மனைவிக்கு அளிப்பு.. தவெகவில் வெடித்த சர்ச்சை!




அவரது கடிதத்தில், இணையதளங்களில் பரவிய 200க்கும் மேற்பட்ட பதிவுகளை அகற்றியுள்ள உங்களது குறிப்பிடத்தக்க சாதனையை நாங்கள் அங்கீகரித்து பாராட்டுகிறோம். உங்களது நடவடிக்கைகள், எண்ணற்ற பெண்களின் கண்ணியம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை காப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. மேலும், சமூகத்தில் ஏற்படக்கூடிய தொடர்ச்சியான பாதிப்புகளையும் தடுக்க உதவியுள்ளன.
இணையக் குற்றங்களும், ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் உங்களின் இந்த செயல் தைரியம், பொறுப்புணர்வு மற்றும் மனித நேயத்தின் சிறந்த முன்னுதாரணம் ஆகும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர்களது பிரைவசியை காப்பாற்றி, மரியாதையான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் எங்களது முயற்சிக்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவை அசாம் காவல்துறை பெரிதும் மதிக்கிறது.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் வீட்டின் அருகே புதிய தலைமை செயலகம்? கடலின் அழகை ரசிக்க ஏற்பாடு.. அதிகாரிகள் தீவிர ஆய்வு!
இந்த பணியில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கு எங்களது தொடர்ச்சியான ஆதரவு எப்போதும் உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரகதீஷ் கூறும்போது, டிஜிட்டல் குற்றங்களை பொருத்தவரை விரைவாக செயல்பட்டால்தான் குற்றத்தை முற்றிலும் தடுப்பதுடன், இணையத்திலிருந்து அகற்றி பாதிப்புகளை குறைத்து, விரைவாக தீர்வு காணமுடியும். அந்தப் பணியைதான் செய்கிறோம் இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இணையத்தில் அத்துமீறி பரவிய பெண்கள் தொடர்பான ஆபாச வீடியோ புகைப்படங்கள் மற்றும் அவதூறு போன்ற சைபர் குற்றங்களை கண்டறிந்து அவற்றை நீக்கிய தற்காக மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் நடத்திவரும் அமைப்புக்கு அசாம் மாநில காவல் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.