தவெகவுக்கு ஆதரவு – எஸ்.காமராஜை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்
TTV Dhinakaran : தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் எஸ். காமராஜை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கி, அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மே 12 : தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் எஸ். காமராஜை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கி, அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கியுள்ளதாக அமமுக அறிவித்துள்ளது.
எஸ்.காமராஜை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்
கடந்த மே 9, 2026 அன்று மன்னார்குடி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக எம்எல்ஏ எஸ்.காமராஜ், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பதாகவும் அதற்கான ஆதரவு கடிதத்தையும் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அன்றைய தினம் இரவே ஆளுநரை சந்தித்த அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், எஸ்.காமராஜ் தவெகவிற்கு ஆதரவாக கடிதம் வழங்கவில்லை எனவும், தவெக அளித்திருப்பது போலி கடிதம் என்று புகார் அளித்தார்.
இதையும் படிக்க : முதல்வரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை.. எங்கு? எப்படி செயல்படும் தெரியுமா?
மேலும் எஸ்.காமராஜை காணவில்லை எனவும் பரபரப்பு புகார் தெரிவித்தார். இதனையடுத்து தவெக தரப்பில் எஸ்.காமராஜ் தவெகவுக்கு ஆதரவாக கடிதத்தில் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி எம்எல்ஏ, தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என விளக்கமளித்தார்.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கடந்த மே 10, 2026 ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகவும் அந்த கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட னர்.
இந்த நிலையில் கடந்த மே 11, 2026 அன்று சட்டமன்றம் கூடிய நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் எதிர்கட்சித் தலைவராக செயல்படவுள்ளார்.
இந்த நிலையில் தான், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தார். இதனயடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனயைடுத்து பேசிய எஸ்.காமராஜ், கட்சி தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : திமுக – அதிமுக கூட்டணி பேசியதா? உண்மைதான் என்ன? விளக்கமளித்த தலைவர்கள்!
இதற்கிடையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சிவி சண்முகம் அணி என 2 ஆக பிரிந்துள்ளனர். இந்த நிலையில் சி.வி.சண்முகம் தலைமையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நலிையில் அதிமுக தரப்பில் தவெகவிற்கு எதிராக வாக்களிப்பது என முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆதரவாக வாக்களிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக எச்சரிக்கைவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


