தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு!
CM Ordered To Close 717 Tasmac Bars in Tamil Nadu | தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழகத்தில் சுமார் 717 மதுபான கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, மே 12 : தமிழ்நாட்டில் கோயில்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களில் மூட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் மது மற்றும் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்த நிலையில், ஆட்சி அமைத்தது முதலே முதலமைச்சர் விஜய் அதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சுமார் 717 டாஸ்மாக் கடைகளை மூட அவர் உத்தரவிட்டுள்ளார்.
717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் விஜய்
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.4,000 கோடி மது விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 2025 – 2026 நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.48,344 கோடி வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது. இவ்வாறு அரசுக்கு அதிக வருவாய் வழங்கும் முக்கிய துறையாக டாஸ்மாக் விளங்கி வருகிறது.
இதையும் படிங்க : ஈபிஎஸ் முதல்வராக முயன்றார்.. நாங்கள் தவெகவுக்கு ஆதரவு – பகீர் கிளப்பிய சி.வி. சண்முகம் குழு




டாஸ்மாக் மதுபான கடைகள் அரசுக்கு வருமானத்தை ஈட்டி கொடுத்தாலும், அதனால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான், முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2 வாரங்களுக்குள் மூட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்
தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள 186 கடைகள், பஸ் – ரயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்கு செயல்படும் 255 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளாக மூட உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் இந்த 2 நாட்கள் மழை கொட்டித் தீர்க்க போகுது.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இவ்வாறு மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு கடைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் பார்களில் சட்ட விரோத மது விற்பனை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.