“நீட்டை கொண்டு வந்தது யாருங்க?”.. சட்டசபையில் வெடித்த விவாதம்.. தவெக, காங்கிரஸ், திமுக இடையே காரசாரம்!
NEET Exemption Resolution: தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு தனித்தீர்மானம் மீதான விவாதத்தில், "நீட் தேர்வை நாட்டிற்குள் கொண்டு வந்தது யார்?" என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான வார்த்தைப் போர் வெடித்தது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்கு பெறப்பட்ட வரலாறு குறித்து அவையில் விரிவாக விளக்கப்பட்டது.
சென்னை, ஆகஸ்ட் 12: தமிழக சட்டமன்றத்தில் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி உரிமை தொடர்பான நீட் விலக்கு குறித்த விவாதம் நடைபெறும் போது, அது குறித்த விவாதங்கள் அவையைச் சூடேற்றுவது வழக்கமாகும். அந்த வகையில், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நீட் விலக்கு தனித்தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்கள், இதில் அரசியல் வேண்டாம் என்றும் மாணவர்களின் எதிர்காலப் பிரச்சினையை ஒருமனதாக அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இருப்பினும், நீட் தேர்வு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணி, கடந்த காலத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் நீட் வரலாற்றுப் பதிவுகள் குறித்துத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே அவையில் கடுமையான காரசார விவாதம் வெடித்தது.
இதையும் படிக்க: “முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!
தவெக உறுப்பினரின் விமர்சனமும் கேள்விகளும்:
விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாமல் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்ததுடன், திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது என்ற பழைய வரலாறுகளைப் பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தேர்தலுக்கு முன்பே நீட் பாதிப்புகள் குறித்து குரல் கொடுத்ததையும், அனிதா மரணத்திற்கு நேரில் சென்றதையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர், சமீபத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட சேலம் கோபிகா, தர்மபுரி ரோஷினி, கிருஷ்ணகிரி வெற்றி ஆனந்தன் ஆகிய மூன்று தமிழ்நாட்டு மாணவர்கள் உயிரிழந்த போது அரசு சார்பில் யார் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள் எனக் கேள்வி எழுப்பி அவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
காங்கிரஸ் – திமுக அளித்த வரலாற்று விளக்கம்:
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட வரலாறு குறித்து அவையில் தெளிவுபடுத்தினர். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுகவின் காந்தி செல்வன் இணையமைச்சராக இருந்தபோது அவர்தான் நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார் என்ற கூற்றை மறுத்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போதைய சுகாதாரத் துறை மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத் தான் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார் என்றும், அப்போது மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவும், தமிழக முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு ஒத்து வராது எனக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினர் என்றும் எ.வ.வேலு சுட்டிக்காட்டினார்.
இதையும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..
தமிழ்நாட்டிற்குப் பெறப்பட்ட விலக்கு:
கலைஞரின் உறுதியான எதிர்ப்புக் காரணமாகவே, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக உத்தரவாதம் அளித்ததாகவும், அதனால் கலைஞர் ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு நுழையவே இல்லை என்றும் திமுக சார்பில் பெருமிதத்துடன் பதிவு செய்யப்பட்டது. தங்கள் தரப்பில் நீட் தேர்வு எப்போதுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவையில் முன்வைத்து, இந்த விவாதத்தை உறுப்பினர்கள் நிறைவு செய்தனர்.