மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
Udhayanidhi Criticizes Sanatana Dharma: மக்களை பிரிக்கக் கூடிய சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இவரது கருத்துக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முதல்வர் விஜய் ஆகியோர் எதிர் கருத்து தெரிவிக்கவில்லை.
தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டம் 2- ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை ( மே 12- ஆம் தேதி நடைபெற்றது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: எப்போதும் சிரித்த முகத்துக்கு சொந்தக்காரரான பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் ஏற்கெனவே பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவராவார். இதனால், அவருக்கு பேரவை மரபுகள் மற்றும் விதிகள் புதிதல்ல. தற்போதுடன் சேர்த்து மூன்று முறை ஆளுங்கட்சி சார்பாக நீங்கள் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுங்கட்சியையும் அரவணைத்து செல்லுகின்ற பேரவை தலைவராக பொறுப்பேற்றுள்ளீர்கள். இந்த பொறுப்பில் நடுநிலையுடன் செயல்படுவீர்கள் என்பதை எங்களுடைய எதிர்பார்ப்பாகும். இதே போல, பேரவை துணை தலைவரான ரவிக்குமாரும் துணையாக இருந்து பேரவையை வழி நடத்துவார் என்று உறுதியாக நம்புகின்றோம்.
விஜய்யின் அரசியல் நாகரீகம் பேரவையிலும் தொடர வேண்டும்
தமிழக முதல்வர் விஜய் அனைத்து அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். இந்த அரசியல் நாகரீகம் பேரவையிலும் தொடர வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் எதிரி கட்சியாக இல்லாமல் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். திமுக எப்போதுமே ஆக்க சக்தியாகும். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சட்டப்பேரவை என்றால் அது தமிழக சட்டப்பேரவை ஆகும். இதற்கு இயற்றப்பட்ட சட்டங்கள் உள்ளிட்டவையே காரணமாகும். இந்த பேரவையில் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடம் அளித்து ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அரசை நடத்துவதில் திமுகவே சீனியர்
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று தனித்தனி வரிசையில் இருந்தாலும் தமிழகத்திற்கான வளர்ச்சியில் அனைவரும் ஒரே வரிசையில் நிற்க வேண்டும். பேரவை தலைவரும், முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரான நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஒரே கல்லூரியில் படித்தாலும் அரசை நடத்துவதில் திமுகவே சீனியர் ஆகும். 1967- இல் ஆட்சிக்கு வந்தது திமுக என்பது அனைவருக்கும் தெரியும். அதன் அடிப்படையில் எங்களுடைய அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து அளிப்பதில் உறுதியாக உள்ளோம். இதனை ஏற்றுக் கொள்ள ஆளுங்கட்சி தயாராக இருக்க வேண்டும்.
திமுக தோழமை கட்சியின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைப்பு
தவெக அரசு பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுபோல, பேரவை கூட்டத்தின் போது வந்தே மாதரம் பாடல் இசைப்பது தொடர்பாக ஆளுநர் வெளிநடப்பு செய்திருந்தார். இது வருங்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதில் ஆளும் அரசு அனுமதி அளிக்கக்கூடாது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெருபான்மையே மக்கள் வழங்காமல் போனாலும், திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் உதவியுடன் ஆட்சி அமைத்திருக்க கூடிய புதிய அரசுக்கும், முதல்வருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்
மக்களை பிரிக்கக்கூடிய சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த கருத்துக்கு சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் மற்றும் முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்டோர் எந்த எதிர் கருத்தோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.