நள்ளிரவில் பயங்கரம்.. கும்பகோணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்கம் கொள்ளை!
Kumbakonam 35 Sovereign Gold Stolen : கும்பகோணம் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்க செய்து பீரோவை உடைத்து சுமார் 35 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் உள்ள அம்மாசத்திரம் வ. உ. சி. நகரை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். இவர், கடந்த ( ஆகஸ்ட் 15- ஆம் தேதி) சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார். இந்த நிலையில், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை தனது செல்போன் மூலமாக செல்வராஜ் பார்க்க முயன்றார். ஆனால், கேமராக்கள் திடீரென வேலை செய்யாதது தெரிய வந்தது. இதனால், சந்தேகம் அடைந்த செல்வராஜ் அவரது வீட்டின் அருகே உள்ள உறவினர்களை தொடர்பு கொண்டு இந்த சம்பவத்தை கூறி, வீட்டை பார்க்குமாறு தெரிவித்தார். அதன்படி, அவரது வீட்டுக்கு சென்ற அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு 35 பவுன் நகை கொள்ளை
மேலும், இந்த விவரத்தை செல்வராஜுக்கும், திருவிடைமருதூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். செல்வராஜ் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில், வைக்கப்பட்டிருந்த சுமார் 35 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!




தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை
தொடர்ந்து, விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கை ரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும், போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் மோப்ப நாய் ஓடி சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து, செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா அடிப்படையில் போலீசார் வலை
மேலும், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதில், ஒரு கண்காணிப்பு கேமராவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பூட்டிய வீட்டில் 35 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சேலத்தில் கொடூர சம்பவம்.. 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து ஒராண்டாக கூட்டு பாலியல் வன்கொடுமை.. காமுகன்கள் 4 பேர் கைது!