திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது விசிக? தவெகவுடன் கூட்டணி தொடரும்.. தொல்.திருமாவளவன் அறிவிப்பு!
Vck Thol. Thirumavalavan Speech : தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி தொடரும் என்று தமிழ் தேசிய மாநாட்டில் அந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். வருங்காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் கட்சியாக வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய மாநாடு இன்று ( திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால், மாநாட்டு மேடை மற்றும் திடல் பகுதிகளில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. அப்போது, மாநாட்டில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வருகை தந்தார். உடனே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆரவாரத்துடன் கைகளை தட்டி கூச்சலிட்டு வரவேற்றனர். தொடர்ந்து, அவர் மாநாட்டு மேடையில் ரேம்ப் வாக் நடந்தார். இதைத் தொடர்ந்து, மாநாட்டில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேச தொடங்கினார். இதில், அவர் பேசியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சியாக உள்ளது. இனி வரும் காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் ஆளும் கட்சியாக வரவேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம்- விடுதலை சிறுத்தைகள் கூட்டணி தொடரும்
இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். திமுக ஆளும் கட்சி, அதிமுக ஆளும் கட்சி, காங்கிரஸ் ஆளும் கட்சி, தற்போது ஆளும் முதல் அமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக வெற்றிக் கழகமும் தமிழ் தேசிய களத்தில் இணைந்தே பயணிக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆளும் கட்சியாக பரிணமிக்கும் என்று தெரிவித்தார். முன்னதாக விசிகவின் தமிழ் தேசிய மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
மேலும் படிக்க: முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!




பேச்சை சுருக்கமாக முடித்த தொல். திருமாவளவன்
தொடர்ந்து, தொல். திருமாவளவன் மேடையில் ரேம்ப் வாக் சென்ற போது, அந்த கட்சியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மேடையில் ஏறத் தொடங்கினர். இதனால், மேடையிலும், மேடை பகுதியிலும் கட்டுக்கடாங்காத கூட்டம் காணப்பட்டது. அவர்களை போலீசார் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள், பவுன்சர்கள் கட்டுப்படுத்த முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது பேச்சை சுருக்கமாக முடித்து கொண்டார். இதனால், மாநாடு தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவடைந்தது. இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழ் தேசிய மாநாடு நிறைவு பெற்றது.
தவெக – விசிக கூட்டணி அறிவிப்பு
முன்னதாக தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலை சந்தித்து இருந்தது. இதில், 5 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தவெக ஆட்சி அமைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக தமிழக வெற்றி கழகம் -விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியை தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “சந்தி சிரிக்கும் சர்க்கஸ் சர்க்கார்” தவெக அரசின் 100 ஆட்சியில் 546 குற்ற சம்பவங்கள்…திமுக வீடியோ வெளியிட்டு விமர்சனம்!