AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை – நடமாடும் ரோந்து வாகனம் சேவை தொடக்கம் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது, ஒரு சில இடங்களில் சில நபர்கள் வேண்டுமென்றே பியூஸ்களை அகற்றுகின்றனர். ஒரு சில இடங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. முதலமைச்சரும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்று பேசினார்.

இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை – நடமாடும் ரோந்து வாகனம் சேவை தொடக்கம் –  அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
அமைச்சர் நிர்மல்குமார்
Baskar P
Baskar P | Published: 10 Jun 2026 17:58 PM IST

சென்னை, ஜூன் 10  : சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், அதிகரித்து வரும் கோடைக்கால வெப்பம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் எதிர்பாராத மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில், மின்வாரிய ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் 10 சிறப்பு குழுக்கள் மற்றும் 125 நடமாடும் ரோந்து வாகன சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நடமாடும் ரோந்து வாகனம் சேவை தொடக்கம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது, கடந்த சில நாட்களாக சென்னையில் மின்சார பழுது, பியூஸ் ஆஃப் ஆகுதல் மற்றும் மின் கம்பிகள் அறுந்து விழுதல் உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்படுவதை பார்த்திருக்கிறோம். ஒரு சில இடங்களில் சில நபர்கள் வேண்டுமென்றே பியூஸ்களை அகற்றுகின்றனர். ஒரு சில இடங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தும் செய்து வருகிறோம். முதலமைச்சரும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க : வாரவிடுமுறை நாள்கள்.. சென்னை டூ சொந்த ஊர் செல்ல திட்டமா? அரசு சிறப்பு பேருந்துகள் ரெடி!

இன்று மட்டும் 125 வாகனங்கள் ரோந்து பணிக்காக சென்னை முழுவதும் அனைத்து மண்டலங்களிலும், அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு பேர் கொண்ட குழு செயல்படும். பொறியாளர்கள், கேங்மேன் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றுவார்கள். ஒட்டுமொத்தமாக 500 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இரவு முழுவதும் ரோந்து பணியில் இருப்பார்கள்.

ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் 10 உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உயர்மட்ட குழுக்கள் ஒவ்வொரு நாளும் ரோந்து பணியில் ஈடுபட்டு, எங்கெல்லாம் மின்தடை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். இன்று முதல் உயர்மட்ட குழுக்கள் நேரடியாக ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. எந்த அதிகாரிகள் எந்த பணியில் உள்ளனர் என்ற விவரங்கள் அனைத்தும் மின்னகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

எங்கெல்லாம் பிரச்சினைகள் உள்ளனவோ, சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் வெளியிடும் தகவல்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரோந்து சேவைக்காக 125 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரிய வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்வதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் அவற்றின் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதற்குத் தேவையான கூடுதல் நிதியாக ஒவ்வொரு பிரிவிற்கும் ரூ.50 ஆயிரம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக சில இடங்களில் ஒரே மாதிரியான பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. டிரான்ஸ்பார்மர்களில் தீப்பற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற நடக்காத விஷயங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எங்கள் துறை சார்பில் ஏற்கனவே ஏழு குழுக்கள் செயல்பட்டு வந்தன. தற்போது 500 பணியாளர்களைக் கொண்ட 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்காணிக்க 10 உயர்மட்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உபகரணங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிக்க : நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டம்.. 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய்..

ஏற்கனவே பிரச்சனைகள் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் போர்க்கால நடவடிக்கையாக, மழைக்காலம் மற்றும் புயல் காலங்களில் எவ்வாறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்படுகிறதோ அதேபோன்று தற்போது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இந்த சிறப்பு குழுக்கள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எங்கும் மின்சார தட்டுப்பாடு இல்லை. கடந்த வாரம் இரண்டு நாட்கள் மின்ட் மில்லில் மின்சார பிரச்சினை ஏற்பட்டதால் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அது 10 முதல் 15 நிமிடங்களுக்குள் சரிசெய்யப்பட்டது. மின்சார தட்டுப்பாடு எங்கும் ஏற்படவில்லை. விநியோகப் பிரிவில்தான் சில சிக்கல்கள் உள்ளன. சென்னை முழுவதும், அம்பத்தூர் வரையிலும் 125 வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. மீண்டும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும் இடங்களுக்கு அவை உடனடியாக செல்கின்றன. பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், அரும்பாக்கம், விருகம்பாக்கம், கொடுங்கையூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்சினைகள் நடைபெறுகின்றன.

குறிப்பாக பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் ஒரே மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதை கவனித்துள்ளோம். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு நபர்கள் பிடிபட்டுள்ளனர். எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக சிலர் எந்த எல்லைக்கும் செல்லலாம். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் சொல்வதற்கேற்ப ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் முதலமைச்சருக்கு இல்லை. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடும் என்பது பொதுமக்களுக்கும் தெரியும்.

 

Follow Us