திமுகவில் இணைந்ததால் ஓபிஎஸ்ஸுக்கு என்ன சாதகம்… அதிமுகவுக்கு என்ன பாதகம்!
O Panneerselvam Join DMK: திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இணைந்துள்ள நிலையில், அவரது இந்த முடிவு அவருக்கு எந்த வகையில் சாதகத்தையும், அதிமுகவுக்கு எந்த விதத்தில் பாதகத்தையும் ஏற்படுத்தும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பை மேலும் அதிகரித்திருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். ஆம், அவர் அரசியல் வாழ்க்கையில் பெரிதளவில் எதிர்த்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது தான் அந்த பரபரப்புக்கு மூல காரணமாகும். அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை ஆரம்பித்து, அதனை கழகமாக பதிவு செய்து அதிமுக உரிமைகளை திரும்ப பெறுவதற்காக பல்வேறு படையெடுப்புகளை மேற்கொண்டு வந்தார் ஓ.பி.எஸ். ஆனால், அவர் எடுத்த படையெடுப்புகளில் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதற்கு பலனாக, அவரது கூட்டணிக்கு அச்சாரமாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட பலர் அவரை தனித்து விட்டுவிட்டு திமுகவில் ஐக்கியமாகினர்.
அரசியல் நகர்வு குறித்து தீவிர ஆலோசனை
இருந்தாலும், எதற்கும் அசராமல் தங்களை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அதற்கு கைமாறாக எந்த பதவி மற்றும் பொறுப்புகளை கேட்க மாட்டோம் என்றும் ஓ பன்னீர்செல்வம் வாய்மொழியாக அறிக்கை விட்டார். இதில், அவரது ஆதரவாளர் ஒருவர் ஒருபடி மேலே சென்று எடப்பாடி கே. பழனிசாமி காலில் விழகூட தயாராக இருப்பதாகவும் கூறி இருந்தார். ஓபிஎஸ் தரப்பில் இருந்து இத்தனை தூதுகள் அனுப்பியும் அவருக்கு சாதகமான செய்தி வந்து சேரவில்லை. இதனால், திமுகவில் இணையலாமா… தவெகவில் இணையலாமா… அல்லது இந்த கூட்டணியில் பங்கேற்கலாமா… தனியாக கட்சி ஆரம்பிக்கலாமா… என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக யோசனை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.. இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா?




ஓ. பன்னீர் செல்வத்துக்கு என்ன சாதகம்
ஆனால், இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் ஓ பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில், திமுக மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலினை புகழ்ந்து பேசி வந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று திடீரென திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் மூலம் ஓ. பன்னீர் செல்வத்துக்கு உரிய அங்கீகாரம் மற்றும் அவரது தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறலாம். அதே நேரத்தில், அவரது சமுதாய வாக்குகளையும் சிதறாமல் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓ. பன்னீர் செல்வத்துக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுவில் 3 முறை முதல்வரா இருந்து விட்டு எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்தது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதிமுகவுக்கு என்ன பாதகம்
இதே போல, அதிமுகவை எடுத்துக் கொண்டால் ஓ பன்னீர் செல்வத்தை இணைக்காமல் இருந்தது எடப்பாடி பழனிசாமி மீது ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது அதிமுகவில் உள்ளவர்கள் மற்றும் அந்த கட்சியின் விசுவாசிகள், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் தவறான மன நிலையை ஏற்படுத்துவதுடன் அனுதாபத்தின் அடிப்படையில் ஓ பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக வாக்களிக்கும் மனநிலையை ஏற்படுத்தக் கூடும். இது, அதிமுகவுக்கு வருகின்ற வாக்குகளை சிதறடிக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும், தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளாத எடப்பாடிக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டதாகவும், அதிமுகவுக்கு இணையான கட்சியில் இணைந்துள்ளதாகவும் விடுக்கும் மறைமுக தகவலாகவே உள்ளது.
மேலும் படிக்க: திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. மானங்கெட்டு திரிய வாழ்த்துகள் – காட்டமான பதிவை வெளியிட்ட அதிமுக ஐடி விங்..