அதிருப்தியில் பாஜகவில் இருந்து விலகல்? சரத்குமார் கொடுத்த அதிரடி விளக்கம்!!
Tamil Nadu Assembly Election: அதோடு, தனக்கு எம்.பி அல்லது எம்.எல்.ஏ உள்ளிட்ட எந்தப் பதவிகளின் மீதும் விருப்பமில்லை என்றும், தான் எந்தப் பதவியையும் யாரிடமும் கேட்கவில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். கடந்த 2024 தேர்தலின் போதே நான் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினார்.
Tamil Nadu Polls 2026: பாஜகவில் இருந்து விலகப் போவதாக வெளியான தகவல்களுக்கு சரத்குமார் விளக்கமளித்துள்ளார். பாஜகவில் சரத்குமாருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், அதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவர் மீண்டும் தனது பழைய கட்சியான சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகத் தனது ஆதரவாளர்களை தி.நகர் அலுவலகத்திற்கு அழைத்து அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவிய நிலையில், தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
இதையும் படிக்க: “அதிமுகவை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்!”.. இபிஎஸ், ஆர்.பி.உதயகுமார் மீது ஓபிஎஸ் கடும் தாக்கு..
2024ல் கட்சியை கலைத்த சரத்குமார்:
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு நடிகர் சரத்குமார், அதிரடியாக பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். பாஜகவில் வட இந்தியத் தலைவர்கள் தமிழகம் வரும்போது அவர்களை வரவேற்பதில் சரத்குமார் ஒரு முக்கிய முகமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




சரத்குமார் கொடுத்த விளக்கம்:
இது குறித்து சரத்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் அந்தத் தகவல்களை முழுமையாக மறுத்துள்ளார். அதன்படி, “நான் பாஜகவை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இல்லை. தற்போது வரை பாஜகவில்தான் தொடர்கிறேன். இது குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும், நாளை நடைபெறவுள்ள ஆதரவாளர்கள் கூட்டம் என்பது ஒரு மாதாந்திரக் கூட்டம் தான். இதற்கும் கட்சி விலகலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார். ஒவ்வொரு மாதமும் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கம், ஆனால் நாளை செய்தியாளர் சந்திப்பு என்று திட்டமிடப்பட்டதால் இத்தகைய விவாதங்கள் கிளம்பிவிட்டன என்று அவர் தெரிவித்தார்.
பதவிகள் மீது விருப்பமில்லை:
அதோடு, தனக்கு எம்.பி அல்லது எம்.எல்.ஏ உள்ளிட்ட எந்தப் பதவிகளின் மீதும் விருப்பமில்லை என்றும், தான் எந்தப் பதவியையும் யாரிடமும் கேட்கவில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். கடந்த 2024 தேர்தலின் போதே நான் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை. இப்போதும் எனக்குப் பதவி மீது விருப்பமில்லை” என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு கட்சியை முழுமையாகக் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்திருப்பதால், தனது ஆதரவாளர்களுக்குக் கட்சியில் உரிய இடத்தைப் பெற்றுத் தர வேண்டிய தேவை இருக்கிறது. அதைப் பற்றி விவாதிக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
இதையும் படிக்க: “அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா?”.. டெல்லியில் டிடிவி தினகரன் பேட்டி!!
அதிகாரப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சரத்குமார் போன்ற ஒரு பிரபலமான முகம் விலகினால் அது பாஜகவிற்குப் பின்னடைவாக அமையும். ஆனால், சரத்குமார் தற்போது அந்தத் தகவல்களை மறுத்துள்ளதால், அவர் தனது ஆதரவாளர்களுக்கான அதிகாரப் பங்கீடு குறித்து பாஜக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.