AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“10 தோல்வி பழனிசாமிக்கு 10 கேள்விகள்”.. முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்..

Tamilnadu Assembly Election: கடந்த 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனையைத் தவிர்த்து, பாஜக தமிழகத்திற்கு வழங்கிய சிறப்புத் திட்டம் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமியால் பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாரா?

“10 தோல்வி பழனிசாமிக்கு 10 கேள்விகள்”.. முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக எழுப்பிய அனல் பறக்கும் கேள்விகள்..
முதல்வர் மு.க.ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Apr 2026 08:18 AM IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், உச்சகட்ட அரசியல் பரபரப்பில் தேர்தல் களம் உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனல்பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்றைய தினம் திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி 10 தோல்வி பழனிசாமி என மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, டெல்லியை வீழ்த்தியுள்ள இந்த நேரத்தில் மக்கள் சார்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க விரும்புவதாக 10 கேள்விகளை அடுக்கினார்.

மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

மும்மொழி கொள்கை குறித்த நிலைப்பாடு?

முதல் கேள்வியாக, தமிழகத்தின் மிக முக்கியமான உணர்வுப்பூர்வமான விவகாரங்களை முதல்வர் தொட்டார். திருவள்ளுவருக்குக் காவி பூசுவது, மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக் கல்விக் கொள்கை ஆகியவற்றில் அதிமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக தலைவர்கள் உறுதியளிக்க முடியுமா?

மேலும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி ஒதுக்கப்படும் என்ற மத்திய அமைச்சரின் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா? என்று கேட்டார். அதோடு, ஒரு கற்பனைக்காக கூறுகிறேன் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என வைத்துக்கொள்வோம், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என பாஜக தலைவர்கள் உறுதி கொடுப்பார்களா?

நீட் தேர்வு மற்றும் சிறுபான்மையினர் நலன்:

தமிழக மாணவர்களின் கனவைச் சிதைக்கும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதை ஏன் அதிமுக தனது கூட்டணியில் ஒரு நிபந்தனையாக வைக்க முடியவில்லை எனச் சாடினார். தொடர்ந்து, கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் சொத்துகளைப் பறிக்கும் வக்ஃப் சட்டத் திருத்தம் போன்ற விவகாரங்களில் பாஜகவை எதிர்க்கும் தைரியம் எடப்பாடிக்கு உண்டா? என வினவினார்.

திராவிடக் கொள்கையும் பெயரளவில் மாற்றமும்:

பாஜக கொண்டு வரும் புதிய சட்டங்களுக்குச் சமஸ்கிருதத்தில் பெயரிடுவதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், “சமஸ்கிருதப் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆங்கிலமாகிவிடுமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவின் பெயரிலேயே ‘திராவிடம்’ இருக்கும் நிலையில், திராவிடம் என்பது போலி என்று கூறும் பாஜகவினருடன் கூட்டணி வைத்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு உறுத்தவில்லையா? என்றும், இது ஒரு அடிமைத்தனம் அல்லவா? என்றும் காரசாரமாகக் கேட்டார்.

தமிழகத்திற்கான திட்டங்கள் என்ன?

கடந்த 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனையைத் தவிர்த்து, பாஜக தமிழகத்திற்கு வழங்கிய சிறப்புத் திட்டம் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமியால் பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாரா என்பதும் அவரது முக்கிய கேள்வியாக இருந்தது.

மேலும் படிக்க: ராகுல் காந்தி தமிழகம் வருகை.. அழுத்தமா? கூட்டணி தர்மமா? பின்னணி என்ன?

தலைவர்களை அவமதிக்கும் போக்கு:

அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரால் போற்றப்பட்ட தந்தை பெரியாரை பாஜகவினர் அவமதிக்கும்போது, அதற்குப் பதில் அளிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று கேட்டார். இந்த 10 கேள்விகளுக்கும் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கத் தவறினால், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் அவருக்கு ‘பூஜ்யம்’ மதிப்பெண்களை வழங்கிப் பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.

Follow Us