அறைகள் காலி.. கார்கள் ஒப்படைப்பு.. விடைபெறும் புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள்!
Puducherry Ministers And MLA: புதுச்சேரி மாநிலத்தில் அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் உள்ள தங்களது அறைகளை காலி செய்து வருகின்றனர். கார்களையும் ஒப்படைத்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை அறிவித்தது. இதில், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி (வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 1,099 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 34 பேர், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 117 என மொத்தம் 294 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியில் திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தன.
புதுச்சேரியில் 4 முனை போட்டி – வரலாற்று வாக்குப்பதிவு
இதே போல, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட்டன. இதனால், தமிழகத்தை போல புதுச்சேரியிலும் 4 முனை போட்டி நிலவியது. புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் அதிகபட்சமாக 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி ஒரு வரலாற்றை பதிவு செய்திருந்தது. கடந்த 1964- ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தலில் இதுவே மிக உயர்ந்த வாக்கு பதிவாகும். இந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 4- ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட உள்ளன.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்.. பீட்டா அமைப்பு அனுப்பிய கடிதம்..




முதல்வர் முதல் – எம்எல்ஏக்கள் வரை அறைகள்
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவை துணைத் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு அலுவலகங்கள் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த காரணத்தால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்கள் அலுவலகங்களை பூட்டிவிட்டு தேர்தல் பணிகளுக்கு சென்று விட்டனர். இதே போல, அவர்கள் பயன்படுத்தி வந்த கார்களும் அரசு செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு 8 நாள்களே உள்ள நிலையில், தங்களது அலுவலகங்களை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் காலி செய்து வருகின்றனர். மேலும், அலுவலகத்தில் பயன்படுத்திய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை வாகனங்கள் மூலம் ஏற்றி செல்கின்றனர். தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மீண்டும் அந்த அறைகள் புதுப்பிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!