2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!
Tiruppur LRG Government Womens College: திருப்பூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமராக்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 2 மணி நேரம் வீடியோ காட்சிகள் பின்னோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கியமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு, தமிழக போலீஸ், சிறப்பு காவல் படை, மத்திய பாதுகாப்பு படை என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் உள்ளே 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போல, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல். ஆர். ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 25) அதிகாலை 4 மணி முதல் சிசிடிவி காட்சிகளின் நேரம் மாறியதாக கூறப்படுகிறது.
2 மணி நேரம் பின்னோக்கி சென்ற வீடியோ காட்சி
அத்துடன், சிசிடிவி காட்சிகள் தற்போதைய நேரப்படி சுமார் 2 மணி நேரம் பின்னோக்கி ஓடுவதாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, நேற்று இரவு 2 மணி நேரம் இன்டர்நெட் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி மற்றும் தமிழக வெற்றி கழக கட்சியின் முகவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல். ஆர். ஜி. அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: ரூ. 20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள்.. சென்னை மாநகராட்சி தகவல்..
கண்காணிப்பு கேமரா இணைப்பில் தொழில் நுட்ப கோளாறு
அப்போது, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் ஆய்வு மேற்கொண்ட போது, அனைத்தும் சரியாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் சி. சி. டி. வி. கேமரா இணைப்பில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு சுமார் 2 மணி நேரம் பின்னோக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, கண்காணிப்பு கேமராக்கள் ஆப் செய்யப்படாமல் 2 மணி நேரம் பின்னோக்கி செல்லாது எனவும், 2 மணி நேரம் கேமராக்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் ஆன் செய்யப்பட்ட காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்து பாதுகாப்பில்லை
மேலும், இந்த இடைப்பட்ட நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மற்ற கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கான தெளிவான காரணத்தை முறைப்படி தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்த பாதுகாப்பு அறை வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்? வெளியான தகவல்