தவெக தலைவர் விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்.. பீட்டா அமைப்பு அனுப்பிய கடிதம்..
பிரச்சாரத்தின் போது புறாவை பறக்க விட்ட சம்பவம் தொடர்பாக பீட்டா இந்தியா, விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆலோசனையை மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24, 2026: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு, விலங்குகள் நல அமைப்பான பீட்டா இந்தியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் ரோடு ஷோ நடத்தினார். வழக்கமாக அவர் ரோடு ஷோ நடத்தும் போது, தொண்டர்கள் பல்வேறு வகையான பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம்.
திருச்சி பிரச்சாரத்தின் போது புறாவை பறக்கவிட்ட விஜய்:
அவ்வாறு ஒரு தொண்டர் வெள்ளைப் புறா ஒன்றை விஜய்க்கு வழங்கினார். அதை உடனடியாக வாங்கிய விஜய் பறக்க விட்டார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், அந்த புறாவின் இறக்கைகளில் கட்சிக் கொடியின் நிறங்கள் பூசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..
இந்த நிலையில், பிரச்சாரத்தின் போது புறாவை பறக்க விட்ட சம்பவம் தொடர்பாக பீட்டா இந்தியா, விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆலோசனையை மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய்க்கு பிட்டா அமைப்பு கடிதம்:
மேலும், புறாக்கள் அதிக உணர்வுத்திறன் கொண்டவை என்றும், அவற்றுக்கு வண்ணம் பூசுதல், அடைத்து வைத்தல், கூட்ட நெரிசலுக்குள் திடீரென விடுவித்தல் போன்ற செயல்கள் கடுமையான மன அழுத்தம், குழப்பம் மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 85% வாக்குப்பதிவு என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒன்று.. தவெக தலைவர் விஜய்..
இத்தகைய செயல்கள், 1960ஆம் ஆண்டு விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தை மீறக்கூடும் என்றும் பீட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பறவைகள் இருந்தால் ஒப்படைக்க வேண்டும்:
அத்துடன், விஜய் தன்னிடம் பறவைகள் இருந்தால் அவற்றை மறுவாழ்வு மையங்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்தாத தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பீட்டா இந்தியா அமைப்பின் சட்ட ஆலோசகர் விக்ரம் சந்திர வன்சி கூறுகையில், “விலங்குகளுக்கு அரசியல் சார்பு இல்லை. அவற்றின் நலன் மனிதர்களின் இரக்கம் மற்றும் கருணையைப் பொறுத்தது. உயிருள்ள பறவைகளை காட்சிப் பொருளாக பயன்படுத்துவது, அவற்றுக்கு வண்ணம் பூசுவது மற்றும் இரைச்சல் மிகுந்த சூழலில் பறக்க விடுவது அவற்றை அச்சமடையச் செய்யலாம்; காயப்படுத்தலாம் அல்லது நோய்வாய்ப்படுத்தலாம்,” என தெரிவித்தார்.