தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ…பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய்!
Tamilaga Vettri Kazhagam : அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் அந்தக் கட்சியில் இருந்து விலகி தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டார். இதனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் அவரது சொந்த தொகுதியில் களமிறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் அந்த கட்சியில் இருந்து விலகி தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார். அவர், இன்று திங்கள்கிழமை காலை ( பிப்ரவரி 16) பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து, விஜயின் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாக அறிவித்தார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட்டு மனோகரன் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
வாசுதேவநல்லூர் தொகுதியில் களமிறக்க வாய்ப்பு
இதை தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மனோகரன் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் தொகுதியில் தவெக சார்பில் களமிறக்கபடலாம் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்த நாள் முதல் சமீப நாட்களுக்கு முன்பு வரை அந்தக் கட்சியில் மாற்றுக் கட்சியினர் யாரும் இணையாமல் இருந்து வந்தனர்.
மேலும் படிக்க: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..




தவெகவில் இணையும் அதிமுகவினர்
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அந்த கட்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் அதிரடியாக இணைந்து பரபரப்பை கிளப்பியிருந்தார். அவருக்கு தவெக தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்று மிகப்பெரிய குண்டை வீசி இருந்தார்.
தவெகவில் இணை வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நபர்கள்
இவரை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அதன் தலைவர் தொல். திருமாவளவனுக்கும், துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஆதவ் அர்ஜுனா அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை..எந்த வழியாக அமைக்கப்படும்..வழித்தடம் வெளியீடு!