ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
Airline Ticket Prices: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேரம் என்பதால் விமானங்களில் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பொது மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த டிக்கெட் கட்டணம் எப்போது குறையும் என புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளியூர்கள் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை தந்தனர். இதன் காரணமாக, தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான நிறுவனங்கள் தங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை அதிகளவு உயர்த்தியது. இந்த நிலையில், தேர்தல் முடிந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், தற்போதும் விமான கட்டணம் குறைந்தபாடில்லை. ஏனென்றால், வாக்குப் பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் மீண்டும் தாங்கள் வேலை பார்க்கும் ஊர்களுக்கு செல்லும் நிலையில், விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்படாமல் அதிக விலையிலேயே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், விமானங்களுக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ள விமான கட்டணம்
அதன்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமான நிலையம் செல்வதற்கு சாதாரண நாட்களில் சுமார் ரூ.9,000- ஆக இருக்கும் கட்டணம், தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரூ.15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதே போல, திருச்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையம் செல்வதற்கு சாதாரண நாட்களில் சுமார் ரூ.6 ஆயிரமாக இருந்த விமான கட்டணம், தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்துக்கு ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!




சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள்
இதே போல, ஹைதராபாத் செல்வதற்கு விமான கட்டணம் ரூ.8 ஆயிரமாகவும், சென்னை விமான நிலையம் செல்வதற்கு ரூ.7 ஆயிரமாகவும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.7,500- ஆக இருந்த விமான கட்டணம், தற்போது ரூ.11,500- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை செல்வதற்கு சாதாரண நாட்களில் ரூ.6 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரூ.7,500- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடும் அதிர்ச்சியில் விமான பயணிகள்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்திருந்த பொது மக்களின் வருகையை வைத்து விமான நிறுவனங்கள் அதிக அளவு டிக்கெட் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக, வெளியூர் செல்லும் பொதுமக்கள் அதிகளவு விமான கட்டணம் காரணமாக கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். ஏற்கனவே, வெளியூர்களில் இருந்து தமிழகம் வருவதற்கான விமான கட்டணம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து வெளிநாடுகள் செல்வதற்கான விமான கட்டணமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!