ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
Auto LPG Shortage: அத்துடன் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில கியாஸ் நிரப்பும் மையங்கள் தற்காலிகமாக, மூடப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைவரும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடத்தும் மையங்களைத் தேடி ஒரே நேரத்தில் செல்வதால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சென்னை, ஏப்ரல் 26: வாகனங்களுக்கான எரிவாயு நிரப்பும் மையங்களில் போதுமான அளவு கையிருப்பு இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலை கொள்ளத் தேவையில்லை என்று இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர். சென்னையில் வாகனங்களுக்கான எரிவாயு நிரப்புவதற்காக, தண்டையார்பேட்டை, கிண்டி, தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஆட்டோ டிரைவர்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தட்டுப்பாடு மற்றும் திடீர் விலை ஏற்றத்தால், டிரைவர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று அவதிக்கு உள்ளாகினர்.
இதையும் படிக்க: சென்னையில் LPG எரிவாயு தட்டுப்பாடு.. தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்.. வாழ்வாதாரம் பாதிப்பதாக வேதனை!!
எல்பிஜி எரிவாயு விலை உயர்வு:
அத்துடன் ஆட்டோக்கள் எரிவாயு நிலையங்களில் அணிவகுத்து நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தத் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் ஆட்டோ டிரைவர்களின், வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சுமார் 62 ரூபாய் முதல் 68 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஆட்டோ எல்.பி.ஜி கேஸ், தற்போது 94 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சில தனியார் எரிவாயு நிலையங்களில் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தனியார் மையங்கள் மூடல்:
இதுகுறித்து இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது, இந்திய எண்ணெய் நிறுவனங்களில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கீழ் செயல்படும் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கும் போதுமான அளவு எரிவாயு வழங்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் தங்களுக்குரிய வாகனங்களில் போதுமான அளவு கியாஸ் நிரப்பி கொள்ளலாம். ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதற்குக் காரணம் பல தனியார் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் கியாஸ் இல்லாமல் இருப்பதுடன், விலைகளும் ஏற்றப்பட்டு உள்ளது.
வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை:
அத்துடன் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில கியாஸ் நிரப்பும் மையங்கள் தற்காலிகமாக, மூடப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைவரும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடத்தும் மையங்களைத் தேடி ஒரே நேரத்தில் செல்வதால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சென்னையில், கடந்த சில நாட்களாக காலை 6 மணி முதலே எரிவாயு நிரப்பு வரிசையில் நிற்கும் ஓட்டுநர்கள், 9 மணி வரை காத்திருந்தும் எரிவாயு நிரப்ப முடியாமல் தவிக்கின்றனர். பொதுமக்களின் சவாரி அதிகமாக இருக்கும் காலை நேரங்களில் எரிவாயு நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளதால், அன்றாடச் சவாரிகளை மேற்கொள்ள முடியாமல் வருமான இழப்பு ஏற்படுகிறது.
இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?
ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரத்தைக் காக்க எல்.பி.ஜி ஆட்டோக்களுக்கு மாறிய தங்களுக்கு, இப்போது இங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, எரிவாயு தட்டுப்பாட்டை நீக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.