போலீஸ் வாகனங்களில் வருகிறது புதிய மாற்றம்.. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!
CCTV Camera In Police Vehicle: சென்னையில் சிறை கைதிகளை நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து செல்லும் காவல் துறை வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பாெறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத்தில் போலீசார், கைதிகள் இடையே வாக்குவாதம், மோதல் சம்பவம் நடைபெறுவதை தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள புழல் ஜெயில் மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட ஜெயில்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நடைபெறும் போது, போலீசார் அவர்களை தங்களது காவல்துறை வாகனங்களில் அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்து வருகின்றனர். சில நேரங்களில் சென்னையை தாண்டி வெளி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கும் கைதிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவ்வாறு நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பயங்கர ரவுடிகள் மற்றும் கொடூரமான குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மீண்டும் சிறை திரும்பும் வழியில் போலீசாருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சில கட்டத்தில், போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.
போலீஸ் வாகனத்தில் காவலர்கள் மீது தாக்குதல்
ஆனால், இந்த சம்பவத்தில் உண்மை தன்மை முழுவதுமாக வெளியே தெரிவது இல்லை. இதில், யார் மீது தவறு. தாக்குதல் நடந்ததற்கான காரணம் என்ன என்பதை போலீசார் கண்டறிவதில் மிகுந்த சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மீண்டும் சிறை திரும்பும் வழியில் கைதிகளின் உறவினர்கள் கஞ்சா பொட்டலங்களை அத்துமீறி காவல்துறை வாகனங்களின் உள்ளே வீசுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்த பிரச்சனைகளை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: வெயிலின் தாக்கத்தால் ஏசி கேட்ட மனைவி.. வாங்கி தர மறுத்த கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!




போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்
ஆனால், அதையும் மீறி காவல் துறை வாகனத்தின் உள்ளே வைத்தே போலீசாரை ரவுடிகள் தாக்குவதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், கைதிகளின் உறவினர்கள் கஞ்சா பொட்டலங்களை வாகனத்தில் உள்ள வீசுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறை துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில், கைதிகளை நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் காவல்துறை வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது.
50- க்கும் மேற்பட்ட வாகனங்களில் கேமராக்கள் அமைப்பு
அதன்படி, சென்னை மாவட்டத்தில் முதல் கட்டமாக சிறை கைதிகளை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லும் 50- க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களில் நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், வாகனத்தின் உள்ளே ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் கேமராவில் பதிவாகும் காட்சிகள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்ற போது, போலீசாரை கைதிகள் தாக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!