ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு விலை உயர்வு
எண்ணெய், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் தற்போது ரயில் நிலைய உணவகங்களிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் மையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகின் மிக நீண்ட ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் தினந்தோரும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்த நிலயைில் ரயில் பயணங்களின் போது ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட்டபடியே பயணிப்பது அலாதியானது. இந்த நிலையில் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலை வருகிற ஜூன் 1, 2026 அனறு முதல் உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு விலை அதிரடியாக உயர்வு
எண்ணெய், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் தற்போது ரயில் நிலைய உணவகங்களிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் புதிய விலைப்பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த புதிய விலைப்பட்டியல் வரும் ஜூன் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம்.. புதிய அம்சங்கள் என்ன என்ன?
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் மையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விலைப்பட்டியலை அனைத்து உரிமம் பெற்ற உணவகங்களும் இரு மொழிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த விலை உயர்வுக்கு ஏற்ப உணவின் தரமும் மேம்பட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக உணவின் தரம் மற்றும் அளவு தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய விலைப்பட்டியலின்படி, உருளைக்கிழங்கு வடை ஒன்று ரூ.15 ஆகவும், வெஜ் சமோசா ரூ.20 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெஜ் சாண்ட்விச் ரூ.35, வெஜ் சீஸ் சாண்ட்விச் ரூ.45, வெஜ் பப்ஸ் ரூ.20, பருப்பு வடை ரூ.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வெஜ் ஃப்ராங்கி ரூ.30, வெஜ் சீஸ் ஃப்ராங்கி ரூ.45, பேல் ரூ.25 என விற்பனை செய்யப்படும். தென்னிந்திய உணவுகளில் சாதா தோசை ரூ.25, மசாலா தோசை ரூ.35, வெங்காய தோசை மற்றும் உத்தப்பம் ரூ.30, ரவா தோசை ரூ.35 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட்லி சாம்பார் ரூ.30, மெது வடை ரூ.35, ரவா இட்லி ரூ.35, உப்புமா ரூ.25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : No Cost EMI-ல் உண்மையாகவே வட்டி இல்லையா?.. EMI பெறுவதற்கு முன்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
பாவ் பாஜி ரூ.50, சோளே பூரி ரூ.40, தயிர் வடை ரூ.35, வெஜ் கட்லெட் ரூ.35 என விற்பனை செய்யப்படும். மேலும், வெஜ் பீட்சா ரூ.50, வெஜ் நூடுல்ஸ் ரூ.50, மிசல் பாவ் ரூ.35, டோனட் ரூ.15, சாஃப்டி ஐஸ்கிரீம் ரூ.20 என புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பழச்சாறுகளில் கேரட், அன்னாசி, மாம்பழம் மற்றும் தர்பூசணி ஜூஸ் ரூ.25 ஆகவும், ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் ஆப்பிள் ஜூஸ் ரூ.40 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
இதற்கிடையில், 16 வகையான உணவுப் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய ரயில்வே மண்டலத்தை தொடர்ந்து, மற்ற ரயில்வே மண்டலங்களிலும் விரைவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், ஜூன் 1 முதல் ரயில் நிலையங்களில் சிற்றுண்டி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.



