இனி கூடுதலாக பணம் செலுத்தலாம்… வந்தாச்சு புதிய பிஎஃப் திட்டம் – ஊழியர்களுக்கு என்ன மாற்றம்?
மாத சம்பளம் பெறுபவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதில் சிறப்பம்சமாக பணியாளர்கள் விரும்பினால் ரூ.1800க்கு அதிகமாக பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு நிகராக நிறுவனங்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாத சம்பளம் பெறுபவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த பிஎஃப் திட்டத்திற்கு பதிலாக, 2026 ஆம் ஆண்டின் புதிய பிஎஃப் திட்டம் கடந்த ஜூன் 29, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பிஎஃப் பங்களிப்பு, அவசர தேவைகளுக்கு பணம் எடுக்கும் விதிகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பிஎஃப் பங்களிப்பு தொகை குறித்த முக்கிய அறிவிப்பு
புதிய விதிகளின்படி, தற்போது சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள மாத ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 ஆகவே தொடர்கிறது. இதன்படி, ஊழியர்கள் கட்டாயமாக செலுத்த வேண்டிய பிஎஃப் தொகை, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவிகதமாகும். அதாவது ரூ.1,800 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதே அளவு தொகையை நமது நிறுவனமும் செலுத்தும்.
இதையும் படிக்க : இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. இத தெரிஞ்சுக்கோங்க!
கூடுதலாக செலுத்த முடியுமா?
இந்த நிலையில் பணியாளர்கள் விரும்பினால் ரூ.1800க்கு அதிகமாக பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை Voluntary Provident Fund என்ற விருப்ப பங்களிப்பாக கருதப்படும். அதே போல இந்த தொகைக்கு நிகராக நிறுவனங்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிஎஃப் திட்டத்தில் பங்களிப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. பணியாளரும், நிறுவனமும் தலா 12 சதவிகிதம் செலுத்தும் நடைமுறை தொடரும். ஏற்கனவே 10 சதவிகித பங்களிப்பு சலுகை பெறும் நிறுவனங்களுக்கு அந்த விதியே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் பகுதி தொகையை திரும்பப் பெறும் நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?
3 பிரிவுகளின் கீழ் பணம் பெறலாம்
- மருத்துவ அவசரத் தேவைகள், கல்வி மற்றும் திருமணம்
- வீடு வாங்குதல் அல்லது வீடு கட்டுதல் தொடர்பான செலவுகள்
- அரசால் அனுமதிக்கப்பட்ட சிறப்பு சூழ்நிலைகள்
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பிஎஃப் திட்டத்தை முழுமையாக டிஜிட்டலாக மாற்றுவது என கூறப்படுகிறது. ஆன்லைன் மூலம் பணம் எடுக்கும் கோரிக்கைகள், இ – பாஸ்புக் வசதிகள் ஆகியவை இனி எளிதாகும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பிஎஃப் தொகையை பெறுவதும் முன்பைக் காட்டிலும் எளிதாகும். இனி பிஎஃப் தொடர்பான பணிகளுக்கு இபிஎஃப்ஓ அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.



