இனி போன் கால்களுக்கு பெயர் கட்டாயம் – தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
s Caller Name Display : வருகிற நவம்பர் 1, 2026 முதல், மொபைலுக்கு (Smartphone) அழைப்பு வரும்போது அழைப்பவரின் எண்ணுடன் அவரது பெயரும் தானாகவே திரையில் தோன்றும் வகையில் புதிய வசதியை மத்திய அரசு கட்டாயமாக்கி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம.
தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், போன் செய்தவர் யார் என்று தெரிந்துகொள்ள இனி ட்ரூ காலர் போன்ற தனி செயலிகளைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. வருகிற நவம்பர் 1, 2026 முதல், மொபைலுக்கு (Smartphone) அழைப்பு வரும்போது அழைப்பவரின் எண்ணுடன் அவரது பெயரும் தானாகவே திரையில் தோன்றும் வகையில் புதிய வசதியை மத்திய அரசு கட்டாயமாக்கி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம.
இனி போன் கால்களுக்கு பெயர் கட்டாயம்
மத்திய தொலைத்தொடர்புத் துறை காலிங் நேம் பிரசன்டேஷன் எனப்படும் வசதியை நவம்பர் 1, 2026 முதல் அறிமுகப்படுத்துமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது, போன் செய்பவரின் எண்ணையும் பெயரையும் காட்டும் காலர் ஐடி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவின்படி, 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி தானாகவே செயல்படுத்தப்படும். இதற்காக பயனர்கள் எந்தவித செயலியையும் நிறுவ தேவையில்லை. 2ஜி, 3ஜி நெட்வொர்க்குகள் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளில் இதனை அமல்படுத்துவது குறித்து தனியாகப் பரிசீலிக்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்.. இந்தியாவுக்கு எப்போது வரும்?




இனி மொபைலுக்கு போன் வரும்போது, திரையின் முதல் வரியில் அழைப்பவரின் எண் காட்டப்படும். இரண்டாவது வரியில், அந்த எண்ணை நீங்கள் உங்கள் மொபைலில் சேமித்து வைத்திருக்கும் பெயர் தோன்றும். எண் சேமிக்கப்படாமல் இருந்தால், அழைப்பவர் சிம் கார்டு வாங்கும்போது தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பதிவு செய்த பெயர் காட்டப்படும். இது உள்நாட்டு அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டு அழைப்புகளுக்கு, International Call என்று மட்டுமே திரையில் தெரியும்.
இதற்காக, ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களின் பெயர்களையும் எண்களையும் இணைக்கும் தரவுத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்க வேண்டும். அழைப்பைப் பெறும் நிறுவனம், அந்தத் தரவுத்தளத்தில் இருந்து பெயரை எடுத்து பயனருக்குக் காட்டும். இந்த வசதியை வடிவமைப்பிலேயே பாதுகாப்பு அம்சங்களுடன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அழைப்பு முடிந்த பிறகு, அழைப்பவரின் பெயர் சேமித்து வைக்கப்படக் கூடாது. மேலும், தங்கள் எண்ணை மறைக்கும் ‘காலிங் லைன் ஐடென்டிஃபிகேஷன் ரெஸ்ட்ரிக்ஷன்’ (CLIR) வசதியைப் பெற்றுள்ளவர்களின் பெயர்கள் காட்டப்படாது.
இதையும் படிக்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் அவதார் உருவாக்குவது எப்படி?.. Step By Step Guide இதோ!
நிறுவனங்களுக்கு தனி வசதி
வணிக நிறுவனங்கள் சந்தாதாரர் பதிவில் உள்ள பெயருக்குப் பதிலாக தாங்கள் விரும்பும் பெயரைக் காட்டும் வசதியைப் பெறலாம். ஆனால், அந்தப் பெயர் வணிக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையாகவோ, ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகப் பெயராகவோ இருக்க வேண்டும். இதற்கான ஆவணங்களைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிபார்க்கும். ஏற்கனவே இணைப்பு வைத்திருக்கும் நிறுவனங்கள், விருப்பப் பெயரைக் காட்ட தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.