திருமண கனவோடு இருந்த இளம்பெண்.. எமன் ரூபத்தில் வந்த சரக்கு லாரி.. கண்ணிமைக்கு நேரந்தில் நிகழ்ந்த கொடூரம்..!
Chennai Woman Dies Accident : சென்னை மாவட்டத்தில் பைக் மீது அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை மாவட்டம், எர்ணாவூர் ராமகிருஷ்ண நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருநிறை செல்வி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 3 மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகேந்திரனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் மகேந்திரன் மற்றும் அவரது மகள் திருநிறைசெல்வி ஆகியோர் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு, மகேந்திரன் சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் இருவரும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருவொற்றியூர்- எண்ணூர் விரைவு சாலையில் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, கடற்கரை ஒட்டிய சாலையில் சென்ற போது அந்த பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவில் அருகே அதி வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
பெண்ணின் தலை மீது ஏறிய சரக்கு லாரி
இதில், மகேந்திரன் மற்றும் திருநிறைசெல்வி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, சரக்கு லாரியின் சக்கரம் திருநிறைச்செல்வியின் தலை மீது ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை மகேந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சாலையில் உயிரிழந்து கிடந்த தனது மகளை மடியில் தூக்கி வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களின் கண்களை கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..




திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் விசாரணை
தொடர்ந்து, உயிரிழந்த திருநிறைசெல்வியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயம் அடைந்த மகேந்திரனும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து மகேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடிய லாரி டிரைவருக்கு வலை வீச்சு
அத்துடன், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த திருநிறை செல்விக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தமும், 3 மாதம் கழித்து திருமணமும் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க :சுதந்திர தினம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த வழிகளில் பயணிக்கலாம்?