“எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
Tiruppur Mother Daughter Double Murder: திருப்பூர் மாவட்டத்தில் தாய் மற்றும் மகளை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம் .
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு பூவரசி ( 25 வயது). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அக்சயன் என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் பூவரசியின் குடும்பத்திற்கு தெரிந்த நிலையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இளைஞர் அக்சயனும், பூவரசியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதன் காரணமாக, அந்த இளைஞர் சம்பவத்தன்று பூவரசியின் வீட்டுக்கு சென்று கடும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த அரிவாளால் பூவரசையை கொடூரமாக வெட்டினார்.
அரிவாள் வெட்டில் உயிரிழந்த தாய் – மகள்
இதனை தடுக்க முயன்ற அவரது தாய் தனலட்சுமி அறிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது மரண ஓலம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இளைஞர் அக்சயனை பிடித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரியவந்தது. இதில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் அக்சயன் எம். பி. ஏ. 2- ஆம் ஆண்டு படித்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலம் பூவரசிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம்.
மேலும் படிக்க: நெல்லையில் கவர்ச்சி வலை விரித்து லட்சக்கணக்கில் மோசடி.. போலீசிடம் சிக்கிய 2 ஜகஜால இளம் பெண்கள்!
பெண் வீட்டுக்கு தெரிந்த காதல் விவகாரம்
காதல் விவகாரம் பூவரசியின் குடும்பத்துக்கு தெரிய வந்த நிலையில், அவர் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால், எங்களது காதலை அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்வார் என்று என்னிடம் பூவரசி கூறியிருந்தார். அத்துடன், படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பிறகு திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்து இருந்தோம். இதனால், நண்பர்கள் முன்னிலையில் பூவரசிக்கு தங்க சங்கிலியை கழுத்தில் அணிவித்து இருந்தேன். இதனை பார்த்து அவரது தாய் பூவரசனிடம் கேட்ட நிலையில் எங்கள் காதல் விவகாரம் அவர்களுக்கு தெரிய வந்தது.
எனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக்கூடாது
இதற்கு, பூவரசியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பூவரசியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. என்னிடம் பேசுவதை 6 மாதமாக நிறுத்திக் கொண்டார். மேலும், நாம் பிரிந்து விடலாம் என்று கூறினார். இதனால், பூவரசியின் பெற்றோரிடம் பெண் கேட்ட போது என்னை திட்டி வெளியே அனுப்பி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நான் எனக்கு கிடைக்காத பூவரசி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அவரை கொலை செய்தேன். தடுக்க வந்த அவரது தாயையும் தீர்த்து கட்டினேன் என்று அக்சயன் வாக்கமூலம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க : பழனி நில மோசடி.. சிக்கலில் சஸ்பெண்ட் சார்-பதிவாளர்.. அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!