நெல்லையில் கவர்ச்சி வலை விரித்து லட்சக்கணக்கில் மோசடி.. போலீசிடம் சிக்கிய 2 ஜகஜால இளம் பெண்கள்!
Tirunelveli 2 Women Arrested : திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட இரு இளம் பெண்களை சந்திப்பு காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர் .
திருநெல்வேலி மாவட்டம், காரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முக லட்சுமி ( 23 வயது) மற்றும் இதே பகுதியை சேர்ந்தவர் பூரணசெல்வி ( 30 வயது). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தை தொடங்கி அதில், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக அளவில் வருமானம் ஈட்டலாம் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். இதனை நம்பிய ஏராளமான மக்கள் அவர்களிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர், அவர்கள் கூறியபடி லாபத் தொகையை பணம் செலுத்திய மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, முதலீடு செய்த ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் சண்முக லட்சுமி, பூரண செல்வி ஆகியோரிடம் கேட்டனர். அவர்கள், விரைவில் லாபத் தொகையை தருவதாக தெரிவித்துள்ளனராம்.
நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார்
இதை நம்பிய அந்த மக்கள் சில மாதங்களுக்கு அவர்களிடம் லாபத் தொகை குறித்து கேட்காமல் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் குறித்த மாதங்களை தாண்டியும் லாபத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த ஏராளமான மக்கள் அந்த நிறுவனத்தையும் முற்றுகையிட்டனர். ஆனால், அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், இது தொடர்பாக திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: பெட்ரோல் பங்குகளில் G-Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறுத்தம்?.. அதிர்ச்சி செய்தி!!




லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இரு பெண்கள் கைது
இதில், தனியார் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்த சண்முக லட்சுமி மற்றும் பூரண செல்வி ஆகியோர் கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்ததை ஒத்துக்கொண்டனர்.
இருவரும் மகளிர் சிறையில் அடைப்பு
புகார் அளித்தவர்கள் போக, வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பூரண செல்வி மற்றும் சண்முக லட்சுமி ஆகியோரை திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மகளிர் சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இளம் பெண்கள் இருவர் ஏராளமான பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவமும், அவர்கள் கைதான சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி மரணம் – முதியவர்களுக்கு நேர்ந்த கதி