கோவையில் கல்லூரி மாணவர் சித்ரவதை கொலை.. சக மாணவர்கள் 5 பேர் கைது.. அதிர்ச்சிகரமான பின்னணி!
Coimbatore College Student Murder : கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் கொலையில் தொடர்புடையதாக சக மாணவர்கள் 5 பேரை செட்டிபாளையம் போலீசார் வழக்கு ப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கள்ளக்குறிச்சி மாவட்டம், வள்ளலார் வீதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் ( 19 வயது). இவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். அவரது அறையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமன் ( 19 வயது) உள்பட 4 பேர் தங்கி இருந்தனர். இந்த நிலையில், அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனது நண்பரின் அறையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்கள் இருவரும் சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு செல்ல மலுமிச்சம்பட்டி பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே கல்லூரியில் பயின்று வரும் சுமார் 20- க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்தனர்.
பைக்கில் அழைத்து சென்று கொடூர தாக்குதல்
அவர்கள், அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களது இருசக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது, எங்கள் அறையில் அத்துமீறி நுழைந்து எங்களை தாக்கி செல்போனை பறித்து விட்டது நீங்கள் தானே என்று அவர்கள் கேட்டுள்ளனர். இதில், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அமுதனை சரமாரியாக வெட்டி உள்ளனர்.
மேலும் படிக்க: அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்




விடுதியில் வைத்து மாணவர் மீது தாக்குதல்
தொடர்ந்து, அமுதனை இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்று விடுதியில் உள்ள அவரது அறைக்கு அழைத்து சென்றனர். அங்கும், அவரை கத்தி, அரிவாளை மாற்றி பிடித்து தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அமுதன் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே, அந்த மாணவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தொடர்ந்து, மதிய உணவு இடைவேளைக்காக மற்ற மாணவர்கள் அறைக்கு வந்த போது அமுதன் மயங்கி கிடந்ததை பார்த்தனர். உடனே, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள் ஆராமுதன், சிவரோகித், அரவிந்த், மணி பாலு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: பயணிகள் கவனத்திற்கு! ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்