கணவனுக்கு உணவு கொண்டு சென்றபோது விபரீதம்.. மகன் கண் முன்னே பைக் சக்கரத்தில் புடவை சிக்கி தாய் துடிதுடித்து பலி!
Dindigul Accident Women Dies: திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவருக்கு உணவு கொண்டு சென்ற பெண் பைக்கில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் கண் முன்னே இந்தச் சம்பவம் நிகழ்ந்த்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சித்தையன் கோட்டை பேரூராட்சி, சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லலித் ( 45 வயது). இவரது மனைவி கிருஷ்ணவேணி ( 40 வயது). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், லலித்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக லலித் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் லலித்துக்கு உணவு கொண்டு சென்றனர். திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வக்கம்பட்டி அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக கிருஷ்ணவேணி அணிந்திருந்த புடவை பைக்கின் பின் டயரில் சிக்கியது. இதனால், கிருஷ்ணவேணி நிலை தடுமாறி சாலையின் நடுவில் விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்
உடனே, இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவரது மகன் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கிருஷ்ணவேணியை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கிருஷ்ணவேணி அனுமதிக்கப்பட்டார்.
மேலும் படிக்க: பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெகவினருக்கு தொடர்பு.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!




தலையில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழப்பு
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் அங்கேயே சத்தமிட்டு அழுதார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக லலித்தின் மகன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சேடப்பட்டி கிராமத்தில் பெரும் சோகம்
மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கணவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு உணவு கொண்டு சென்ற மனைவி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும், அந்த கிராமத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!