ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!
Ranipet Accident 3 Died: ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஓட்டேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு ( 59 வயது). இவர், தனது பேரன்களான அஜய், அஸ்வந்த், அனுஷி ஆகியோரை பள்ளியில் விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம் ஆகும். இதேபோல, இன்று வெள்ளிக்கிழமை ( ஜூன் 12- ஆம் தேதி ) தனது இரு சக்கர வாகனத்தில் பேரன், பேத்தியை அழைத்து சென்று கொண்டிருந்தார். இவரது இருசக்கர வாகனம் காவேரிப்பாக்கம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ராணிப்பேட்டை டவுன் பகுதியில் இருந்து அதி வேகமாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக வேலு ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் பயணித்த வேலு மற்றும் அவரது பேரன்கள், பேத்தி ஆகியோர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்தனர்.
3 பேர் பலி – ஒரு பேரனுக்கு தீவிர சிகிச்சை
ரத்த வெள்ளத்தில் கிடந்த இவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேலு, அஸ்வந்த், அனுஷி ஆகிய மூவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மூவரின் சடலங்களும் உடல்கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!




தீவிர சிகிச்சை பிரிவில் மற்றொரு பேரன்
மற்றொரு பேரனான அஜய் பலத்த காயமடைந்து தீவிர சிகிக்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வேலுவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோவின் ஓட்டுநர் ஜெயசூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரக்கு ஆட்டோவை அதிவேகமாகவும், கவன குறைவாகவும் ஒட்டிய காரணத்தால் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
சரக்கு ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை
எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பேரன், பேத்தி மற்றும் தாத்தா ஆகிய மூவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் இவர்களது சடலங்களை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இது பார்ப்போரின் கண்களை கலங்கச் செய்ததாக இருந்தது.
மேலும் படிக்க: பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!