பிரீமியம் கிரெடிட் கார்டு தருவதாகக் கூறி வாட்ஸ் அப் மூலம் ரூ.17.60 லட்சம் மோசடி – என்ன நடந்தது?
Chennai Credit Card Scam : சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கீர்த்திவாசன் என்ற இளைஞரிடம் பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்குவதாக வாட்ஸ்அப் மூலம் லிங்க் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து அனுப்பிய லிங்க்கை ஓப்ன் செய்த அவர், தனது வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
சென்னை, நவம்பர் 10 : பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்குவதாக, சென்னையை சேர்ந்தவரிடம் வாட்ஸ்அப் மூலம் (WhatsApp) ரூ. 17.60 லட்சம் மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞரை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கீர்த்திவாசன் என்ற இளைஞரிடம் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் அவருக்கு பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் கிரெடிட் கார்டில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
பிரீமியம் கிரெடிட் கார்டு – வாட்ஸ் அப் மூலம் மோசடி
இதனைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் மூலம் இணையதள இணைப்பு ஒன்றையும் அந்த நபர் அனுப்பியுள்ளார். அந்த இணைப்பைத் திறந்து வங்கிக்கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்தால், விரைவில் பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய கீர்த்திவாசன், அவர் அனுப்பிய லிங்க்கை ஓப்ன் செய்து தனது வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : “வரலாற்று சாதனைக்கு தயாராகும் தமிழ்நாடு!”.. குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு முதல் ராக்கெட் லான்ச்!




இதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் புதிய செல்போன் ஒன்றை கீர்த்திவாசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், கிரெடிட் கார்டு பெறுவதற்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு நடைமுறைக்காக அந்த புதிய செல்போனில் கீர்த்திவாசனின் சிம் கார்டைப் பொருத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கீர்த்திவாசனும் தனது சிம் கார்டை அந்த புதிய செல்போனில் பொருத்தியுள்ளார். சிறிது நேரத்திலேயே அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 10 லட்சம் பணம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, அவரது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 7 லட்சத்து 60 ஆயிரத்து 440 ரூபாய் பணமும் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்க நபர் கைது
இதனால், அதிர்ச்சியடைந்த கீர்த்திவாசன் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் கீர்த்திவாசன் புகார் பதிவு செய்தார். இனையடுத்து அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கீர்த்தி வாசனிடம் ஏமாற்றிய நபர் மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கு வங்க காவல்துறையினரின் உதவியுடன் ஆன்லைன் பண மோசடியில் தொடர்புடையவர் அபுல் உசேன் ஷேக் என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து சைதாப்பேட்டை குற்றவியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவரிடம் இருந்து கீர்த்தி வாசன் இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சைபர் மோசடிகள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் ஏமாறும் சம்பங்களும் தொடர்கதையாகி வருகிறது.