தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தவெக எம்எல்ஏ-க்கள்.. முதல்வர் தலைமையில் நாளை அவசர ஆலோசனை கூட்டம்!!
TVK Leadership Summons Emergency Meeting for MLAs: தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில், முதலமைச்சர் தலைமையில் நாளை மறுநாள் சென்னை தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, நவ.10: தமிழ்நாட்டில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மை நாட்களாகத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளிலும் புகார்களிலும் சிக்கி வருவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீது எழுந்த தாக்குதல் சர்ச்சை மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீது சமூக வலைதளங்களில் பரவி வரும் புகார்கள் போன்ற சம்பவங்கள் கட்சித் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்களின் நற்பெயரைக் காக்கும் வகையிலும், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் நெறிப்படுத்தவும் கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசெஜ்? பாதுகாப்புக்காக தனி காவலர் நியமனம்.. விஜய் ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி!
அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு:
இந்நிலையில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொடர்ச்சியாக எழுந்து வரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிப்பதற்காகத் தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படவுள்ளது. இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களையும் உடனடியாகச் சென்னைக்கு வருமாறு கட்சித் தலைமை அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாளை (நவ.11) சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் தவெக எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் எனத் குறுஞ்செய்தி (SMS) வாயிலாக அதிகாரப்பூர்வ தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்எல்ஏக்களுக்கு கடுமையான எச்சரிக்கை:
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், தற்போதைய சர்ச்சைகள் கட்சிக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் புகார்கள் மற்றும் பொதுமக்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொள்வதாக எழும் குற்றச்சாட்டுகளைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள கட்சித் தலைமை, இதுகுறித்துத் தகுந்த விளக்கங்களைப் பெறுவதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தவிர்க்க தேவையான எச்சரிக்கைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: குறைகளை சொல்ல வந்தவரை தாக்குவதா?.. துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரத்தில் இபிஎஸ் கடும் கண்டனம்!!
அரசியல் களத்தில் எதிரொலிக்கும் எதிர்பார்ப்புகள்:
தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் சர்ச்சைகள் எதிர்க்கட்சிகளால் தீவிரமாக விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் கூட்டவிருக்கும் இந்த அவசர ஆலோசனை கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கட்சித் தரப்பில் எடுக்கப்பட உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து மக்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.