AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குறைகளை சொல்ல வந்தவரை தாக்குவதா?.. துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரத்தில் இபிஎஸ் கடும் கண்டனம்!!

EPS Strongly Condemns Deputy Speaker: குறைகளைச் சொல்ல வந்த சாமானிய மக்களைத் தாக்கியதாகத் துணை சபாநாயகரும் துறையூர் எம்.எல்.ஏ.வுமான ரவிசங்கர் மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைகளை சொல்ல வந்தவரை தாக்குவதா?.. துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரத்தில் இபிஎஸ் கடும் கண்டனம்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 Nov 2026 13:14 PM IST

சென்னை, நவ.09: பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், துணை சபாநாயகரும் துறையூர் சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், தன்மிடம் குறைகளைச் சொல்ல வந்த பொதுமகன் ஒருவரைத் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகித் தீயாய் பரவியது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அஇஅதிமுக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துத் தற்போதைய தவெக அரசையும் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.வையும் கடுமையாகச் சாடியுள்ளது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டையே உலுக்கிய கோரச் சம்பவம்.. தீபாவளி திருநாளில் ஒரே நாளில் 11 பேர் படுகொலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

இபிஎஸ் கடும் கண்டனம்:

துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான இந்தச் சர்ச்சை குறித்துக் கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் தரப்பின் செயல்களைச் சாடியுள்ளார். தங்களைத் தேர்ந்தெடுத்து வாக்களித்த சாமானிய மக்கள் தங்களது குறைகளைச் சொல்லத் தன்மிடம் வந்தால் அவர்களை அடிப்பதா என அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். “ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் அந்தந்தத் தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர்” என முன்னர் முழக்கமிட்டவர்கள், இப்போது துறையூர் தொகுதி எல்லைக் காப்பாளர் மக்களைக் காப்பாற்றும் லட்சணம் இதுதானா எனத் தவெக அரசை நோக்கி அவர் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

தாக்கப்பட்ட நபர் மறுப்பு தெரிவிப்பு:

இதனிடையே, துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னைத் தாக்கவில்லை என்றும், அதுகுறித்துப் பரவும் தகவல்களில் உண்மையில்லை என்றும் சம்பந்தப்பட்ட நபர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருந்த போதிலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கைவிடவில்லை. பொதுமக்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய ஒரு உயர் பதவியில் உள்ள துணை சபாநாயகர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவது ஜனநாயக முறைக்கு எதிரானது என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், வீடியோ ஆதாரங்கள் வெளியான நிலையில், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் மீது தவெக அரசு என்ன மாதிரியான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிக்க: “தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த கோரம்!”.. சமயபுரம் அருகே 2 சிறுவர்கள் வெட்டிக்கொலை.. திருச்சியில் பரபரப்பு!!

அரசியல் களத்தில் எதிரொலிக்கும் அதிர்வலை:

மக்கள் குறைதீர்க்கும் முகாம்களிலோ அல்லது சந்திப்புகளிலோ மக்கள் பிரதிநிதிகள் பொறுமையாகவும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தச் சம்பவம் தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அஇஅதிமுக வெளியிட்டுள்ள இந்த அதிரடி கண்டன அறிக்கை மூலமாகத் தவெக அரசுக்கு எதிரான அரசியல் அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது. சம்மந்தப்பட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தரப்பிலிருந்து முறையான விளக்கமும் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us