AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ்நாட்டையே உலுக்கிய கோரச் சம்பவம்.. தீபாவளி திருநாளில் ஒரே நாளில் 11 பேர் படுகொலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

11 Murders Reported Across Tamil Nadu: தமிழ்நாடு முழுவதும் தீபாவளித் திருநாளில் ஒரே நாளில் 11 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, சிவகங்கை, தேனி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தத் தொடர் கொலைகள் அரங்கேறியுள்ளன.

தமிழ்நாட்டையே உலுக்கிய கோரச் சம்பவம்.. தீபாவளி திருநாளில் ஒரே நாளில் 11 பேர் படுகொலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 Nov 2026 12:44 PM IST

சென்னை, நவம்பர், 09: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பட்டாசுகளை வெடித்துத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்த வேளையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறிய சில வன்முறைச் சம்பவங்கள் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. பொதுவாகப் பண்டிகைக் காலங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தாலும், முன்விரோதம், போதைக் கும்பலின் அத்துமீறல்கள் மற்றும் தகராறுகள் காரணமாக ஒரே நாளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 11 கொலைகள் பதிவாகியுள்ளன. திருச்சியில் இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று பேர், சிவகங்கையில் இருவர் மற்றும் தேனி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி எனத் தொடர்ச்சியாக அரங்கேறியுள்ள இந்தச் படுகொலைச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதையும் படிக்க: “தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த கோரம்!”.. சமயபுரம் அருகே 2 சிறுவர்கள் வெட்டிக்கொலை.. திருச்சியில் பரபரப்பு!!

மாவட்ட வாரியாகப் பதிவான கொலைகளின் விவரம்:

நேற்றைய ஒரே நாளில் பதிவான இந்த 11 கொலைச் சம்பவங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட 3 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 2 பேரும் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தேனி மாவட்டத்தில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்ததை மற்றும் போதையில் அராஜகம் செய்ததைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) செந்தில்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, சென்னை, திருவள்ளூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் வீதம் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகள்:

ஒரே நாளில் மாநிலம் முழுவதும் இவ்வளவு அதிகமான கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது குறித்துக் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக, தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தென் மண்டலக் காவல் துறை தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் கள ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்ததைத் தட்டிக் கேட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் முன்விரோதத் தகராறுகள் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “ரீல்ஸ் மோகத்தில் கொடூரம்!”.. சாலையை மறித்ததை தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் அடித்துக் கொலை.. தேனியில் அதிர்ச்சி!!

பண்டிகைக் காலப் பாதுகாப்பும், கவலையும்:

தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைக் காலங்களில் மக்களிடையே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்க வேண்டிய சூழலில், அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த 11 படுகொலைகள் சமூகத்தில் நிலவும் வன்முறை மனப்பான்மையையும் போதைப் பழக்கத்தின் தாக்கத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளன. குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கான ரோந்துப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும், குறிப்பாக இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சமூக விரோதக் கும்பல்களை ஒடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரே நாளில் பதிவாகியுள்ள இந்தத் தொடர் கொலைச் சம்பவங்கள் தமிழக அரசியல் மற்றும் சட்டம்-ஒழுங்கு வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Follow Us