AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேலத்தில் ட்ரோன்கள் மூலம் சீட்டாட்டம், மதுக் கும்பலைக் கண்காணிக்கும் காவல் துறை!

Sathis S
Sathis S | Updated On: 09 Nov 2026 14:24 PM IST

Salem City Police Deploy Drones: சேலம் மாநகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்கவும், சீட்டாட்டம் மற்றும் மது குடித்துத் தகராறு செய்வோரைக் கண்காணிக்கவும் காவல்துறையினர் ட்ரோன்கள் மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காடுகள் மற்றும் புதர்மண்டிய பகுதிகளில் இந்த ரோந்து துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம், நவ.09: தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் வேளையில், சில சமூக விரோதக் கும்பல்களும் வன்முறையாளர்களும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக அமைகிறது. குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகள், வயல்வெளிகள் மற்றும் காடுகளில் சட்டவிரோதமாகப் பணத்தைச் வைத்துச் சீட்டாடுவது மற்றும் மது அருந்திவிட்டுப் பொதுமக்களுக்கு இடையூறாகத் தகராறுகளில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பரவலாக நடைபெறும். இத்தகைய சட்டவிரோதச் செயல்களை முற்றிலும் ஒடுக்கும் வகையிலும், அசம்பாவிதங்களைத் தடுத்துச் சட்டம்-ஒழுங்கைப் பேணும் வகையிலும் சேலம் மாநகரக் காவல்துறை நவீனத் தொழில்நுட்ப உதவிகளுடன் அதிரடிக் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கையில் எடுத்துள்ளது.

ட்ரோன் கண்காணிப்புப் பணிகள்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுச் சேலம் மாநகராட்சி பகுதி முழுவதையும் எவ்விதக் அசம்பாவிதங்களும் இன்றி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனச் சேலம் மாநகரக் காவல் ஆணையாளர் பாபு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மாநகரில் உள்ள அனைத்துக் காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் ட்ரோன் (Drone Camera) கேமராக்கள் மூலம் வான்வழிச் சோதனைகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சேலம் அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆணையர் அஸ்வினி தலைமையில், காவல் ஆய்வாளர் பாபு மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Published on: Nov 09, 2026 02:23 PM
Follow Us