தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருட்டு.. பகீர் தகவல் – என்ன நடந்தது?
TN Government Bank Fraud : தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராமநாதபுரம், தாம்பரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து கோடிக்கணக்கில் தமிழக அரசின் பணம் திருடப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியானது.
சென்னை, நவம்பர் 10 : தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராமநாதபுரம், தாம்பரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து கோடிக்கணக்கில் தமிழக அரசின் (TN Government) பணம் திருடப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் நைஜீரியா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ரூ.14 கோடியும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ரூ.3.10 கோடியும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ரூ. 5 கோடி எ மொத்தம் ரூ.22.10 கோடி அரசு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணம் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு சுகாதார நல மையங்கள் கட்ட ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மாநில அளவில் வங்கிக் கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய மக்களால் செம ட்ராஃபிக்! கிளாம்பாக்கம், தாம்பரத்தில் மக்கள் கூட்டம்!!




இந்த திட்டத்துக்கான வங்கிக் கணக்கு சென்னையில் இருந்து நிர்வகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சைபர் கிரைம் கும்பல் இந்த வங்கிக் கணக்கை இணையவழியில் ஊடுருவி பல்வேறு பரிவர்த்தனைகளாக கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னால் நைஜீரிய சைபர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் கும்பல்களுக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.8 கோடி திருட்டு
சில நாட்களுக்கு முன் புதுச்சேரி அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு ரூ.8 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தவெக எம்எல்ஏ-க்கள்.. முதல்வர் தலைமையில் நாளை அவசர ஆலோசனை கூட்டம்!!
இந்த நிலையில், கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கல்லூரியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.8 கோடி மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை திருடியிருக்கலாம் என கூறப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கில் இருந்து இவ்வளவு பெரிய தொகை மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் வங்கிக் கணக்கில் இருந்தும் கோடிக்கணக்கில் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கைவரிசை காட்டிய கும்பல் தான் தமிழக அரசின் வங்கிக்கணக்கையும் ஹேக் செய்ததா? இந்த சம்பவத்துக்கு பின்னால் நைஜீரிய சைபர் கிரைம் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.